இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தீவீரவாத தாக்குதலில் சுமார் 250- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பைத் தீவீரப்படுத்தியது இலங்கை ராணுவம். மேலும் சமூக வலைத்தளங்களும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் இலங்கை இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் , கடைகள் , வீடுகள் மீது இலங்கை சிங்கள மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இலங்கையில் குறிப்பிட்ட இடங்களில் நேற்று இரவு 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அதிபர் தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட இடங்களை கண்காணித்து வருவதாகவும் , வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா இலங்கை மக்களுக்கு ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் இலங்கை மக்களே ஒன்று கூடுங்கள் என்றும் , கண்களை திறக்க வேண்டும் என்றும் , வன்முறை, இனவெறி, வேற்றுமையால் நாம் கண்களை மூடிக்கொண்டிருந்தால் நம் நாட்டையே இழக்க நேரிடும் என இலங்கை மக்களுக்கு ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள பதிவில் சமாதானமாக இருங்கள் , மற்றவர்களையும் பாதுகாப்பாக வையுங்கள் , பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், ஒரு நாடாக மீண்டும் மீண்டு வருவோம் என சங்ககாரா கூறியுள்ளார்.