Skip to main content

சின்னாபின்னமான வேதாரண்யம் -  பால், பிஸ்கட்டுகளுக்காக தவிக்கும் குழந்தைகள்!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
v

 

தமிழகத்தின் கழிமுகப்பகுதியான  வேதாரண்யம் தாலுக்கா முழுமையாக கஜா புயலால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

நாகை மாவட்டத்தின் கடைகோடி தாலுக்காவான  வேதாரண்யம் கஜா புயலால் சின்னாபின்னமாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒரு வாரத்திற்கு மேல் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி கொண்டிருந்து. இந்தநிலையில் நேற்று இரவு 2 மணிக்கு மேல் வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் கரையை கடந்ததால் பலத்த காற்றுடன் மழையும் பலமாக கொட்டித்தீர்த்துள்ளது.

 

v

 

புயலின் கோரதாண்டவம் வேதாரண்யம் தாலுக்காவையே நிலைகுலைய செய்து விட்டது. நாகப்பட்டினம் அடுத்துள்ள வேளாங்கண்ணி முதல் வேதாரண்யம் வரை சாலைக்கு இருபுறமும் உப்பளமும், கடலுமாக இருப்பதால் சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி விட்டது. அதே போல் திருத்துறைப்பூண்டியில் இருந்து கட்டிமேடு, வாய்மேடு வழியாக வேதாரண்யம் செல்லும் சாலைகளும் முழுமையாக மழை நீராலும், சாலையோரம் உள்ள மரங்கள் சாய்ந்தும், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. நேற்று மாலை நிறுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து தற்போது வரை இயக்கப்பட முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

 

ver

 

மேலும் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை மின்சாரமும், தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியூர் செல்லவோ, தொடர்பு கொள்ளவோ முடியாத நிலைமையாகிவிட்டது. அரசு இயந்திரமும், மின்சாரமோ  தொலை தொடர்போ போக்குவரத்தோ இல்லாமல் போனதால் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர்.

 

v

 

மின்சார துண்டித்திருப்பதாலும், போக்குவரத்து துண்டித்திருப்பதாலும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்பட்டுவருகின்றனர். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.   குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட்டுக்குக்கூட வழியில்லாமல் உள்ளனர்.  

 

முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் இருந்த மக்களை முகாம்களுக்கு அழைத்துவரப்பட்டதால், பெரும் உயிர்சேதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மழையால் தற்போது விதைக்கப்பட்ட நேரடி விதைப்பு பயிர்களும் தண்ணீரில் முழுகிக்காணப்படுகிறது. 

 

v

 

மீனவர்களின் படகுகள் முழுமையாகவே சேதமாகியுள்ளன.   பல பைபர் படகுகள் புயலில் அடித்து செல்லப்பட்டும், ஒன்றோடு ஒன்று மோதி உடைந்தும் காணப்படுகிறது.

 

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான தலைஞாயிறு, ஓரடியாம்பள்ளம், வண்டல், குண்டுரான் வேளி, உள்ளிட்ட விவசாய கிராமங்களும், புஷ்பவனம், வானவன்மகாதேவி, தேத்தாக்குடி, தோப்புத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களும் முழுமையாக பாதித்துள்ளன. 

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளையோ, அல்லது மறு நாளோ பார்வையிடுகிறார் அதன் பிறகே நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்