Skip to main content

இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவம் இருந்தால் ராஜபக்சேவை கைது செய்து தண்டனை வழங்க முடியும்! ராமதாஸ்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
rajapakse

 

இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால்,  இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும் என்று  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை:’’இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் என்ன நடந்து விடக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. போர்க்குற்றவாளிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் நடைமுறைகளை இலங்கை அரசு குழி தோண்டி புதைத்து விட்டது.

 

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்; அந்த விசாரணையில் பன்னாட்டு சட்ட வல்லுனர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும்,  அதன்மீது இலங்கை நடவடிக்கை எடுக்காத நிலையில், மேலும் 2 ஆண்டுகள் காலநீட்டிப்பு வழங்கி புதிய தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதிக்க ஐநா. மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக  ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான்  பேரவையின் தீர்மானத்தை செயலாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அப்பட்டமாக கைவிட்டு விட்டதாக குற்றஞ்சாற்றியுள்ளார்.

 

ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, பன்னாட்டு சட்ட விதிகளின் கீழ் குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்ப டவில்லை. வடக்கு கிழக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மக்களிடம் திருப்பி அளிப்பதிலும் முன்னேற்றம் இல்லை. இலங்கையில் நிலைமாற்ற நீதிக்கான (Transitional Justice) செயல்திட்டம் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இதற்கான காலத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. இது தொடர்பாக முன்பு கூறப்பட்ட நடவடிக்கைகள் எதிலும் முன்னேற்றம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதற்கான திட்டமும் வெளியிடப்படவில்லை. உண்மை அறியும் ஆணையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் இல்லை. 2012 வெளிக்கடா சிறையில் 27 பேர் படுகொலை. 2006-ல் முத்தூரில் 17 தன்னார்வப் பணியாளர்கள் கொலை. 1996-ல் குமாரபுரத்தில் 23 தமிழர் படுகொலை, 2009-ல் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை போன்ற குற்றங்களிலும் நீதிவழங்க இலங்கை முன்வரவில்லை என குற்றஞ்சாற்றியுள்ளார்.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் அரக்கத்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. முதலில் போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்று கூறி விசாரணைக்கு மறுத்து வந்த இலங்கை  அரசு, இப்போது போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு போர்க்குற்றவாளிகளை  தண்டிக்க முன்வராதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அதற்கான மாற்று வழிகளை ஆராய்வது தான் நியாயமானதாக இருக்கும். அதைத் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையரும் கூறியிருக்கிறார். உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவம் எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்நாடுகள் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது எந்தெந்த நாடுகளில் உள்ளார்களோ, அவர்கள் மீது அந்தந்த நாடுகளில் வழக்குத் தொடர்ந்து விசாரித்து தண்டிப்பது தான் உலகளாவிய நீதிவழங்குதலாகும். உதாரணமாக இந்தியாவில் அத்தத்துவம் நடைமுறையில் இருப்பதாக வைத்துக் கொண்டால்,  இலங்கைப் போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் அவரை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க முடியும். அதற்கு வசதியாக இந்தியாவிலும் உலகளாவிய நீதிவழங்குதல் தத்துவத்தை (universal jurisdiction) நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர் படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்முயற்சிகளை  உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ’’

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக பிரமுகர் படுகொலை; 9 பேர் கைது - சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
9 people arrested in Salem AIADMK executive Shanmugam case

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவராக இருந்துள்ளார். தற்போது, இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிமுகவினர் அந்தப் பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி துடித்து கண்ணீர் விட்டனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் இவர், சந்துக்கடை வியாபாரம் குறித்தும் லாட்டரி விற்பனை குறித்தும் போலீசாருக்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சண்முகம் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி எனச் சொல்லப்படும் சதீஷ், அருண்குமார், முருகன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்.. திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாகச் சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்; குடியாத்தத்தில் ஒருவர் கைது

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
man was arrested for smuggling cannabis near  Tamil Nadu Andhra border

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான சைனகுண்டா சோதனை சாவடியில் குடியாத்தம் கிராமிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் இவர் குடியாத்தம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வேல்குமார் என்பதும் (வயது 23) இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.