தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 3ஆவது நாளாக நடந்தது.
நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, ம.ஜ.க. பொதுச் செயலாளரும், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது,
வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பலர் கரோனா நெருக்கடியால் வருமானம் இழந்து தாயகம் திரும்பத் துடிக்கிறார்கள். அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் உரிய முறையில் உதவவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி அவர்கள், கரோனா தொடர்பில் அறிவித்துள்ள 20 லட்சம் கோடியில் 1,000 கோடியை ஒதுக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், கப்பல்களை இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களின் விமானம் மற்றும் கப்பல் செலவை மத்திய அரசு ஏற்க வலியுறுத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதி, பிரதமர் நல நிதி (PM CARE FUND) ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்க முடியும். நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், அவர்கள் ஈட்டிய அன்னிய வருவாய் பெரும் பங்காற்றியுள்ளது. இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா - ஈராக் இடையே முதல் வளைகுடா போர் நடந்தபோது ஒரே மாதத்தில் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை திரட்டி வந்தார். ஒரு பலஹீனமான அரசியல் சூழலில் இருந்த அன்றைய ஜனதா தள பிரதமர் சந்திரசேகர் செய்ததை, இன்றைய பிரதமரால் செய்ய முடியாதா?
ஆசிய நாடுகளில் வேலை செய்யும் தமிழர்களில் 1 லட்சம் பேர் ஊர் வர விரும்பினால், ஒரு நபருக்கு 15 ஆயிரம் மட்டுமே டிக்கேட் செலவாகும். இதற்கு 150 கோடி செலவாகும். ஐரோப்பாவிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 30 ஆயிரம் எனில், 30 கோடி செலவாகும். அமெரிக்க, ஆஸ்திரேலியா கண்டங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 75 ஆயிரம் செலவாகும். இதற்கு 75 கோடி செலவாகும். இதற்கு மொத்தமே 255 கோடி ரூபாய் தான் செலவாகும்.
மத்திய அரசு இதைத் தர மறுத்தால், தமிழக அரசு அந்த செலவை ஈடுகட்ட வேண்டும். டாஸ்மாக் மூலம் ஒரு நாளைக்கு 85 கோடி வருமானம் உள்ள நிலையில், இதை ஒப்பிடும் போது மூன்று நாள் டாஸ்மாக் வருமானமே போதுமானது. இவ்வாறு பேட்டியளித்தார்.
இப்போராட்டத்தின்போது பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றவாறு பதாகை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கரோனா உச்சத்தில் இருக்கும் ஊரடங்கு நிலையிலும் இக்கோரிக்கைக்காக பொதுமக்கள் வீதிகளிலும், வீட்டு வாசல்களிலும் திரள்வது கவனிக்கதக்கது. உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் ம.ஜ.க.-வின் இக்கோரிக்கையை தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் ஆதரித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
பல்வேறு சமுதாய மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களையும் தாண்டி, ஊடகங்களிலும் இது விவாதமாகி வருகிறது. மூன்றாம் நாளான இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நகரங்கள், கிராமங்கள் தோறும் போராட்டங்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைப்பெற்று வருகிறது எனத் தெரிவித்தனர் ம.ஜ.க.வினர்.