Skip to main content

தஷ்வந்தின் தலையெழுத்தைத் தீர்மானித்த சாட்சியமும், தடயங்களும்!

Published on 21/02/2018 | Edited on 22/02/2018

தமிழகத்தையே உலுக்கியது சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஹாசினியின் மீதான பாலியல் வன்கொடுமையும், படுகொலையும். கடந்த ஆண்டு பிப்ரவரி  6ஆம் தேதி நடைபெற்ற இந்தப் படுகொலையில், அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த எனும் இளைஞர் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின் காவல்துறையின் அலட்சியத்தால் ஜாமீனில் வெளிவந்தார். 

 

பின்னர் டிசம்பர் 2ஆம் தேதி பணத்திற்காக தன் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு மும்பையில் தலைமறைவான தஷ்வந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். கடந்த ஒரு வருடமாக தஷ்வந்த் மீதான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி தஷ்வந்திற்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது செங்கல்பட்டு நீதிமன்றம். இந்த வழக்கில் தஷ்வந்தின் தலையெழுத்தைத் தீர்மானித்த சாட்சியங்களும், தடயங்களும் இதோ..

 

Dasw

 

கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் 6.15 மணி வரை ஹாசினி குடும்பம் வசிக்கும் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், தஷ்வந்த் மற்றும் அவரது நாயுடன் ஹாசினி விளையாடிக் கொண்டிருந்ததை அதே குடியிருப்பில் வசிக்கும் முருகன் என்பவர் பார்த்திருக்கிறார். மொட்டை மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுப்பதற்காக சென்றபோது, இதைக் கண்ட முருகன் அந்த சமயத்தில் ஹாசினி வீட்டில் யாரும் இல்லை என்பதையும் கவனித்திருக்கிறார். முருகனின் இந்த ‘கடைசியாக பார்த்த சாட்சியம்’ ஹாசினி கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

 

கொலை செய்யப்பட்ட பிறகு ஹாசினியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில், அது ஹாசினிதானா என்று உறுதிப்படுத்த வேண்டி இருந்தது. தடயவியல் துறையில் பணிபுரியும் அறிவியல் அதிகாரி புஷ்பாராணி, சூப்பர் இம்பொஷிசன் எனப்படும் மேல்பதித்தல் முறையைப் பயன்படுத்தியிருந்தார். ஹாசினியின் புகைப்படம் மற்றும் எரிந்த நிலையில் இருந்த உடலின் தலை இரண்டையும் ஒப்பிடும்போது அது ஹாசினி என்பது உறுதியானது.

 

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட உள்ளாடையில் இருந்த விந்துவின் டி.என்.ஏ. மாதிரி, தஷ்வந்தின் ரத்தத்தில் உள்ள டி.என்.ஏ. மாதிரியோடு ஒத்துப்போனது. இதனை தடயவியல் துறையில் உள்ள ஆய்வக அதிகாரி நிர்மலா பாய் உறுதி செய்தார்.

 

அறிவியல்பூர்வமான இந்த சாட்சியங்கள் ஒருபுறம் இருக்க, சட்டரீதியிலான சாட்சியங்கள் காவல்துறை தரப்பில் இருந்து திரட்டப்பட்டது. தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை தஷ்வந்த் மறுத்துவந்தார். ஆனாலும், அவர்மீதான சந்தேகம் துளியும் குறையவில்லை. சிசிடிவி ஆதாரங்கள் தஷ்வந்த் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்த, தற்போது அவர் குற்றவாளி என்பது நிரூபணமாகி இருக்கிறது.

 

46 ஆண்டுகள் சிறைதண்டனையும், சாகும் வரை தூக்கில் போடவும் உத்தரவிட்டு, இந்த வழக்கில் தீர்ப்பளித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், ‘இப்படியொரு தீர்ப்பை வழங்காவிட்டால் சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டார். இரண்டு கொடூரமான கொலைகளுக்கு இத்தனை பெரிய தண்டனை தேவைதான் என சொல்லப்படுகிறது. பாலின சமத்துவத்தும் மிக்க சமூகத்தை உருவாக்குவதை விடவா தண்டனைகள் தவறுகளைக் குறைக்கப் போகின்றன?

சார்ந்த செய்திகள்