Skip to main content

பிரஜ்வல் ரேவண்ணா அதிரடி கைது; நள்ளிரவில் தட்டி தூக்கிய போலீஸ்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
prajwal Revanna Arrested in Midnight Action

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் பிரஜ்வல் ரேவண்ணா மே 31 ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை நேற்று முன்தினம் (27.05.2024) வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதே சமயம் நேற்று (30.05.2024) நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அச்சமயத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்திலேயே வைத்து கார்நாடக காவல்துறையினர் கைது செய்யவும் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று (31-05-24) நள்ளிரவு 1:30க்கும் பெங்களூர் விமான நிலையத்தில் வந்தடைந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சி.ஐ.டி அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு எஸ்.டி.ஐ முன் விசாரணைக்காக ஆஜராகிறார். இதனால், சிறப்பு விசாரணை குழு அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்