ஐக்கிய நாடுகள் சபையின் 43வது மனித உரிமைகள் பாதுகாப்பு மாநாடு பிப்ரவரி 24 முதல் மார்ச் 20 வரை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் மனித உரிமையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து கருத்துரை வழங்குகிறார்கள். அதில், மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து உரையாற்றவும் கருத்துரை வழங்கவும் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு ராம் சங்கர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து கண்டுகொள்ளப்படாததால் அது தமிழகத்தில் ஒரு பெரும் விவாதமாகவும் எதிர்ப்பாகவும் இருந்து வருகிறது.
இந்த சூழலில் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விரிவான விளக்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முன் வழக்கறிஞர் ராம்சங்கர் சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 2012 இல் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற கமிட்டியிலும், 2013-ல் அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை தமிழர்களுக்கான அரசியல் சாசன கருத்தரங்கிலும் திரு ராம் சங்கர் அவர்கள் பங்கேற்றிருப்பதால் இந்தியாவில் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து அவர் நன்கு அறிந்தவர்.
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வைத்து தனக்கு பிறக்கும் குழந்தைகளும் இலங்கை பிரஜையாகவே கருதப்படுகின்றனர் என்றும், அவர்கள் கல்வியிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் வேலைவாய்ப்பு தேடினாலும் வெளிநாட்டினர் பின்பற்றும் விதிகளையே தாங்களும் பின்பற்ற வேண்டியுள்ளது என்றும் தங்களுக்கென்று இந்தியாவில் எந்த சட்ட உரிமையும் இல்லை என்றும் புதிதாக கொண்டுவரப்பட்டு இருக்கும் குடியுரிமை சட்டத்திலும் அதற்கான தெளிவான பார்வை இல்லை என்றும் குறைபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் கருத்துக்களை திரு ராம் சங்கர் அவர்கள் ஐநா மாநாட்டில் எடுத்து வைப்பதோடு கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதியமைச்சர் விரைவில் 95 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இருப்பதாக அறிவித்திருப்பதையும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் திரு.ராம் சங்கர் எடுத்துரைப்பார்.