
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (09.05.2025) இரவும் பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பி இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, பதான்கோட், பிரோஸ்பூர் உள்ளிட்ட 26 இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் முயற்சிகளை இந்தியப் படைகள் முறியடித்தன. அதே சமயம் பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தாக்குதல் சம்பவத்தின் ஒரு பகுதியாக பிரோஸ்பூரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் பொற்கோவில் அமைந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மிக முக்கியமான இந்திய நகரமாக உள்ள அம்ர்தரசில் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சில பகுதிகளில் தற்காலிகமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.