
இஸ்ரோ தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கஸ்தூரி ரங்கன் (வயது 84). இவர் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை என சுமார் 10 ஆண்டு கலாம் இஸ்ரோ தலைவராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகப் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25.04.2.2025) காலை 10.43 மணிக்கு காலமானார். இவரது மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் நாளை மறுநாள் (27.04.2025 - ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRI) வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கஸ்தூரி ரங்கன் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராகவும், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதையும் பெற்றவர் ஆவார். கஸ்தூரி ரங்கன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் ஒரு உயர்ந்த நபரான கே. கஸ்தூரிரங்கனின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது தொலைநோக்குத் தலைமையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற பங்களிப்பும் என்றென்றும் நினைவுகூரப்படும். அவர் இஸ்ரோவிற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்தார். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றார்.
இதற்காக நாம் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றோம். அவரது தலைமைத்துவம் லட்சிய செயற்கைக்கோள் ஏவுதல்களையும் கண்டது மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தியது. தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவின் போது கஸ்தூரிரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், இந்தியாவில் கற்றல் மிகவும் முழுமையானதாகவும், எதிர்காலத்தை நோக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். அவர் பல இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினர், மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கு எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.