Skip to main content

சிம்லா ஒப்பந்தம் ரத்தால் உருவாகிறதா போர்; பாகிஸ்தான் சொல்லும் மறைமுக செய்தி என்ன?

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

 What is the implicit message Pakistan is sending? Is the Shimla Agreement a war born of blood?

ஜம்மு காஷ்மீருக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த அந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வாயிலாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.  

இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையில் 1960இல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு எனபல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவுகளால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியா எடுத்த முடிவின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லக் கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நதிநீர் சென்று வந்தது. இந்த சூழ்நிலையில், ராம்பன் அணையின் மதுகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீர் தற்போது இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சிந்து நதிநீரை நிறுத்தி வைத்த இந்தியாவின் இந்த முடிவு சட்டவிரோத நடவடிக்கை என்றும் இதன் மூலம் இந்தியா நீர் போர் நடத்துகிறது என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. 

 What is the implicit message Pakistan is sending? Is the Shimla Agreement a war born of blood?

இந்த நிலையில், இந்தியா உடனனான சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்த பின்பு, வான்வெளியை இந்தியா பயன்படுத்த தடை  உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தேசியப் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்து வரும் பாகிஸ்தான், தற்போது இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் அதிபர் சுல்ஃபிகார் அலி பூட்டோ ஆகியோரால் கடந்த 1972இல் ‘சிம்லா ஒப்பந்தம்’ போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், 1971இல் நடைபெற்ற போரின் முடிவை கணக்கிட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கக் கூடிய சுமார் 13,000 கி.மீ அளவிலான பரப்பை இந்தியாவிற்கு ஒதுக்கப்படும் என்றும், இரு நாடுகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடு தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை தான், தற்போது பாகிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் இருநாடுகளின் எல்லை தொடர்பான எந்தவித பேச்சுவார்த்தைக்கும் உடன்படிய மாட்டோம் என பாகிஸ்தான் மறைமுகமாக செய்தி சொல்வதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவின் எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்