
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் (வயது 88). போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிப்பதும் மருத்துவத்துறை நிபுணர்களுக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் காலமானார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று (21.04.2025) காலை 07.35 மணியளவில் போப் பிரான்சிஸ் காலமானதாக வாட்டிகன் சிட்டி தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு சர்வதேச அளவில் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு தொடர்பாக அப்போஸ்தலிக் சபையின் கமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபாரெல், காசா சாண்டா மார்ட்டாவில் இருந்து (ஈஸ்டர் திங்கட்கிழமை) காலை 9:45 மணிக்குத் தெரிவித்த தகவல் படி, “அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸ் மறைவை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 07:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.
அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. நற்செய்தியின் மதிப்புகளை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாழ அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்குப் பின் மார்ச் மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இறுதியாக ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார்.
தென் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்ஆவார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பை அவர் வகித்துள்ளார். உலக நாடுகளிடையே போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ் ஆவார்.