ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் - 6ஏ குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் தொடர் கூட்டம் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 29ஆம் தேதி மாலை 4.56 மணிக்கு ஜிசாட் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன், புரொபல்ஷன் கொடுப்பதற்கான முதல் நிலை பற்றிய தகவலை காலை 9.22 மணிக்கு இஸ்ரோ வெளியிட்டது. பொதுவாக விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் வேகம் பெறுவதற்காக சிறு புரொபல்ஷன் கொடுக்கப்படும். இதற்கான இரண்டாம் நிலை புரொபல்ஷன் பற்றிய தகவல்களை இஸ்ரோ வெளியிடவில்லை. எனவே, செயற்கைக்கோளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி குறித்து ஆராய இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில், தொடர் கூட்டம் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கைக்கோளை தொடர்புகொள்வது மற்றும் அதன் எரிசக்தி இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்தான் இதற்குக் காரணம் எனவும், இதை சரிசெய்வதற்காக விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் மட்ட தகவல் தெரிவிக்கிறது. இருந்தாலும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.