நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் நான் கிடையாது. என்னை மன்னித்துவிடுங்கள் என அம்பத்தூர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்த ரவுடி பினு போலீசாரிடம் கெஞ்சியுள்ளான்.
சென்னையை அடுத்த சூளைமேட்டை சேர்ந்தவன் ரவுடி பினு. கேரள மாநிலத்தைச் பூர்விகமாக கொண்ட ரவுடி பினு மீது பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல்நிலையங்களில் 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஆட்கடத்தல், கட்ட பஞ்சாயத்து, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன் ரவுடி பினு.
இந்நிலையில், பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள ஒரு லாரி செட்டில் கடந்த வாரம் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இதற்காக சென்னை முழுவதும் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் பினு அழைப்பு விடுத்திருந்தான். அதனை ஏற்று பனுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்றனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி பினு பிறந்தநாள் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினான்.
பின்னர் அனைத்து ரவுடிகளும் பினுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, மது அருந்திவிட்டு கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் போலீசார் அவர்கள் இருந்த அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அதில் 70 ரவுடிகளை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.
அப்போது ரவுடி பினு, அவனது கூட்டாளிகள் 3 பேர் உள்ளிட்ட மற்றும் சில ரவுடிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இதையடுத்து தலைமறைவான ரவுடி பினு உள்ளிட்டவர்களை 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் ரவுடி பினுவை சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதால், உயிருக்கு பயந்த ரவுடி பினு, அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் இன்று காலை சரணடைந்தான்.
சரணடைந்த ரவுடி பினுவிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரவுடி பினு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ரவுடி பினு, நான் ஜெயில் சகவாசம் எல்லாம் எவ்வளவோ அனுபவித்து விட்டேன். திருந்தி வாழ ஆசைப்பட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன். நான் கரூரில் தலைமறைவாக இருந்தது என் தம்பிக்கு மட்டுமே தெரியும்.
என் 50வது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என என் தம்பி வற்புறுத்தியதால் மலையாம்பாக்கம் வந்தேன். அப்போது கூட தம்பியிடம் கேட்டேன் எதற்கு இதெல்லாம் என்று. அவன் கேக்கை வெட்டி விட்டு நீ கிளம்பிவிடு என்றான்.
3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்ததால், ரவுடிகள் என்னை பார்ப்பதற்கு மலையம்பாக்கம் வந்தனர். அப்போது அவன் கத்தியை தந்ததால் தான், கத்தியால் கேக் வெட்டினேன். கேக் வெட்டிவிட்டு கிளம்பலாம் என்ற போது தான் போலீசார் எங்களை சூழ்ந்துகொண்டனர்.
அதன் பிறகு நான் அங்கிருந்து தப்பித்து சென்றேன். ஆனால், அதன்பிறகு நான் எங்கும் போக முடியாமல் சென்னை போலீசார் என்னை துரத்தி கொண்டே வந்தனர். அதனால் தான் நேரடியாக வந்து சரணடைந்தேன்.
நீங்கள் நினைப்பதுபோல் நான் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் கிடையாது. 50வயதான எனக்கு சர்க்கரை நோய் உள்ளதால் என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்சி கூறியுள்ளான்.
இதையடுத்து, பிறந்த கொண்டாடிய வடக்கு மலையம்பாக்கம் கிராமத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் பினுவை விசாரித்தனர். இந்த விசாரணைக்குப் பின் மாங்காடு காவல்நிலையத்துக்கு பினுவை கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.