ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை சட்டத்தின் வாயிலாக அணுகி அதனை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்களுடைய உணர்வை மதித்து 2013ல் இந்த ஆலையை மூடுவதற்கு ஜெயலலிதா என்ன பணிகளை செய்தாரோ அதே பணிகளை தொடர்ந்து இந்த அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. ஆனால் வேண்டுமென்றே எதிர்கட்சியை சேர்ந்தவர்களும், சில இயக்கத்தை சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இப்படி போராட்டங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
14.04.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் விளம்பரம் செய்துள்ளார். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புதுப்பிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. அந்த கோரிக்கையை மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது என்ற செய்தி அதில் முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதி மக்களின் உணர்வை புரிந்து கொண்டு, அவர்களின் வேண்டுகோளை ஏற்று சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார்கள். போராட்டம் நடத்தியபோதெல்லாம் அமைதியான முறையில் நடந்துகொண்டார்கள். ஆனால் இந்தமுறை எதிர்கட்சியினரும், சில இயக்கங்களும் இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றே இந்த போராட்டத்தை இன்று ஒரு மோசமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். உண்மையிலே உயிரிழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளோம். அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்களோ, அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசை பொறுத்தவரையில், மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை சட்டத்தின் வாயிலாக அணுகி அதனை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.