மதுரையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் என புதிய கட்சியை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் மதுரை சென்ற அவருக்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு தருணத்தில் நான் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய இந்த மண்ணில் மீண்டும் உங்கள் அன்பையும், ஆசியையும் பெற வந்திருக்கிறேன்.
நாளை காலை ராமேஸ்வரத்தில் துவங்கி, பரமக்குடி சென்று பின்னர் மாலையில் மதுரை வருவேன் இங்கு நடக்கும் விழாவில் கட்சி கொடி ஏற்றப்படும், எங்கள் கொள்கைகளில் சாராம்சம் அந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்.
முன்னதாக, தனது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் வருகை தருமாறு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புதுயுகம் படைக்க என தெரிவித்துள்ளார்.