சிவகங்கயில் சாலையை சீரமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அந்த வழியாக பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்று அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர்களின் மறியலால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. அப்போது பரமக்குடி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை இயக்க முயன்றார். இதனை தடுக்க சென்ற குரு தங்கப்பாண்டி என்கிற வழக்கறிஞர் கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனால், கோபம் கொண்ட சக வழக்கறிஞர்கள், அரசுப்பேருந்தின் ஓட்டுனர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் சட்டை கிழிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்தப் போலீசார் ஓட்நரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.