
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா கடந்த 7ஆம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 25 நிமிடங்கள் நடத்திய இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமானது மட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளில் தொடர்புடைய 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அளித்த பதிலடி குறித்துவிளக்கமளிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இன்று (09-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்திய ராணுவ நிலைகள், இந்திய நகரங்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதற்கு, இந்திய ஆயுதப்படைகள் போதுமானதாகவும், பொறுப்புடனும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு, அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் மறுப்பது, என்பது அவர்களின் அவர்களின் இரட்டை வேடத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

மே 7 ஆம் தேதி அதிகாலையில் எல்லை கட்டுப்பாடு கோடு முழுவதும் கடுமையான தாக்குதலின் போது, பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு, பூஞ்சில் உள்ள கிறிஸ்துவ பள்ளிக்குப் பின்னால் விழுந்தது. அந்த வெடிகுண்டு, இரண்டு மாணவர்களின் வீட்டைத் தாக்கியது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் இழந்தனர் மற்றும் அவர்களின் பெற்றோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வெடிகுண்டு தாக்குதலின் போது பல பள்ளி ஊழியர்களும் உள்ளூர்வாசிகளும் பள்ளியின் நிலத்தடி மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர். அதிர்ஷ்டவசமாக பள்ளிகள் மூடப்பட்டது, இல்லையெனில் அதிக இழப்புகள் ஏற்பட்டிருக்கும். குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வழிபாட்டுத் தலங்களை பாகிஸ்தான் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்துகிறது. இதன் மூலம், பாகிஸ்தானின் கீழ்த்தரமான செயல் அம்பலமாகியுள்ளது.
இந்த கொடூரமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, இந்த இடங்களை இந்தியா தான் குறிவைத்து பாகிஸ்தான் மீது பழி போடுவதற்காக பாகிஸ்தான் கூறுவது மூர்க்கத்தனமானது. இந்தியா குருத்வாராவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல் வந்துள்ளது. இது மற்றொரு அப்பட்டமான பொய் மற்றும் பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. பாகிஸ்தான் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், வகுப்புவாத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. இந்தியாவின் உறுதியான ஒற்றுமையே பாகிஸ்தானுக்கு ஒரு சவாலாக உள்ளது” என்று கூறினார்.