
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். அதில், நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே போல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ முன்னாள் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரும் தாக்குதலால், போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “போர் பதற்றம் காரணமாக மக்கள் கூடக்கூடிய இடங்கள் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறோம். அதே மாதிரி, உளவுத்துறையும் காவல்துறையும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை அதிகரித்திருக்கிறோம். கோயில்கள், தியேட்டர், மால்கள், கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.