வழக்கறிஞர் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாகவும், பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பாக மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் பாஸ்கர்மதுரம், லெனின் குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிபதி தாரணி ஆகியோர் விசாரித்து பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்த்னர்.
இந்நிலையில், பார் கவுன்சில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைவதால் அவரது அமர்வில் சில வழக்கறிஞர்கள் ஆஜராகி தீர்ப்பை இன்று வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தீர்ப்பு தயாராகி வருவதாகவும், நாளை மதியம் 2:15 மணிக்கு தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில கருத்துக்களை நீதிபதிகள் பதிவு செய்துள்ளார்.
வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலின் மதிப்பை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக தொழில் முழுவதுமாக சீரழிந்துவிட்டது. மூத்த வழக்கறிஞர்களும் இந்த புனிதமான தொழிலை காக்க தயாராயில்லாமல் தங்கள் பைகளை நிரப்புவதிலேயே குறியாக உள்ளது.
எட்டாம் வகுப்பையே தாண்டாத ஒருவர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று பின்னர் வழக்கறிஞராகி, சங்கமும் நடத்தக்கூடிய சூழல் உள்ளது. தகுதியில்லாதவர்களுக்கு நீதிமன்றம் எதிரிலேயே மிகப்பெரிய கட்-அவுட் வைத்து, அதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகளும் இதுபோன்ற வழக்கறிஞர்களுக்கு துணையாக இருப்பது வேதனையளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு இல்லையென்றால் உயர் நீதிமன்றத்தின் நிலை மிக மோசமாக மாறியிருக்கும். நீதிமன்றத்தின் நிலை மேலும் மோசமாகியிருந்தால், தனக்கு வழங்கப்பட்டுள்ள "ஒய்" பிரிவு பாதுகாப்பு "இசட்" பிரிவாக கூட மாறியிருக்கும்.
சி.ஜீவா பாரதி