"பத்தாயிரம் ரூபாய் பத்தாது.. 1 கோடி ரூபாய் கொடு"...என காங்கிரஸ் கட்சியின் பிரமுகரை கத்தி, நாட்டுவெடிகுண்டு காட்டி மிரட்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவராக இரண்டுமுறை பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த மாங்குடி. காரைக்குடி கற்பக விநாயகர் நகரில் வசித்து வரும் இவருடைய வீட்டிற்கு இன்று காலை 7 மணியளவில் வந்த ஒருவர், "தான் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர். தன்னுடைய பெயர் தமிழ்க்குமரன்" என மாங்குடியிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில் டீ கொடுத்து அமர வைக்கப்பட்டிருக்கிறார். இதே வேளையில், தான் கொண்டு வந்திருந்த துணிப்பையினை திறந்து அதிலிருந்து ஒரு நாட்டுவெடிகுண்டு, ஒரு எலெக்ட்ரானிக் கருவி மற்றும் இரண்டு கத்திகளை அங்கிருந்த டேபிளில் பரப்பி வைத்து விட்டு பேச ஆரம்பித்திருக்கின்றார் அந்த நபர்.
"முன்ன இயக்கமாக இருந்துச்சு.! இப்பக் கட்சியாக பயணிக்கிறதால் நிர்வாக செலவுகள் அதிகமாயிடுச்சு. அதனால் என்ன செய்றீங்கன்னா..! ஒரு ஒரு ரூபாயை எங்க கட்சிக்கு நிதியாகக் கொடுத்திருங்க.! இல்லைன்னா.." என சர்வசாதரணமாகக் கூறிக் கொண்டே வெடிகுண்டுவை உருட்டுவதும், கத்தியை இடமாற்றி வைப்பதுமாக இருந்த நிலையில், " ஐயா.! என்னிடம் அந்தளவிற்கு பணம் இல்லை. நீங்க வேற ஆளைப் பாருங்க.! வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் நிதி தருகிறேன். அதுவும் இப்ப இல்லை.. பத்து நாள் கழிச்சு வாங்கிக்கொள்ளுங்களேன்." என மாங்குடி பேச, மீண்டும் வெடிகுண்டுவைக் காண்பித்துக் கொண்டே, "பத்தாயிரம் வாங்க நாங்க என்ன பிச்சைக்காரர்களா.?! ரூ1 கோடி இப்ப வேண்டும். இல்லைன்னா வேற மாதிரி ஆயிடும்" என அதட்டி உருட்டிய நிலையில் வீட்டின் உட்பக்கம் வந்த மாங்குடியோ காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் சினிமா கிளைமாக்ஸிற்கு வரும் போலீஸ் போல் தாமதமாகவே வந்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தது விசாரணைக்காக அழைத்து சென்றது ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான காரைக்குடி வடக்கு காவல்துறை.
என்பதாம் வருடங்களில் சிறந்த மக்கள் புரட்சியாளர்களாக பேசப்பட்ட தமிழரசனின் அரசியலை உள்வாங்கியே உருவாக்கப்பட்டது தமிழ்த்தேச மக்கள் கட்சி. தமிழரசன் துவக்கிய “தமிழ்நாடு விடுதலைப்படை” என்ற அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் 25.05.2014ல் சென்னையில் தொடங்கப்பட்டது இந்தக் கட்சி. சிவகங்கை மாவட்டத்தில் தமிழரசனின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களால் சிவகங்கை மற்றும் செம்பனூர் பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஜன நெருக்கடி மிகுந்த நகரப்பகுதியில் வெடிகுண்டு கத்தியுடன் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவத்தால் மிகுந்த பரப்பரப்ப்பினை உருவாக்கியுள்ளது இந்த சம்பவம்.