தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டன.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் ஜெயகுமாருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக பிரமுகரை தாக்கிய வழக்கிலும் தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் பெற்றுள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமீன் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.