
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறனர். இந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு இந்தியாவிற்குள் நுழைய முயன்ற போது, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர். இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் தற்போது நடந்து வந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் 1 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மே 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத மர்ப நபர் மூலம் வந்த மின்னஞ்சலில், ‘சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும். ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படும். ஒருவேளை ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும்’ என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ப நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.