Skip to main content

எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுக்கவா சேர்ந்தார்கள்... பா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே இணைந்துள்ளார்கள்..? - திண்டுக்கல் லியோனி பேச்சு!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

sd

 

கடந்த ஒரு மாதமாகவே அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அ.தி.மு.க.வில் இதுதொடர்பாக யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்து, சில நாட்களாக அமைதியாக இருந்த இந்தப் பிரச்சனை 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியது. 

 

முக்கியமாகக் கடந்த, 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்லவத்தை அமைச்சர்கள் மாறி மாறி சந்தித்துப் பேசி ஒருவழியாக தற்போது இ.பி.எஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுதொடர்பாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் பலவேறு கேள்விகளை தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

நீங்கள் எப்பொழுதும் நகைச்சுவையாக மேடைகளில் பேசுக்கூடியவர். உங்களுடைய பேச்சைக் கேட்பதற்காகவே எல்லாக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் உங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது உங்களுக்கு தி.மு.க.வின் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதை எப்படி சிறப்பாகச் செய்ய இருக்கிறீர்கள், இதனைக் கூடுதல் பொறுப்பாக நினைக்கிறீர்களா? 

 

நகைச்சுவை என்பது என்னுடன் கூடவே பிறந்தது. பள்ளி மாணவனாக இருக்கின்ற போதே, லியோனி ஒரு நகைச்சுவை மாணவன் தான். ஆசிரியரான பிறகு, லியோனியின் வகுப்பு மகிழ்ச்சியாக இருக்கும் என்றுதான் என்னுடைய மாணவர்கள் கூறுவார்கள். என்னிடம் இருந்து நகைச்சுவையைப் பிரிக்க முடியவில்லை, அதற்கு அது என்னுடனே பிறந்ததுதான் காரணமாக இருக்கும். தி.மு.க.வின் எந்த மேடைகளிலும் நான் நகைச்சுவை இல்லாமல் பேசியது கிடையாது. எனவே நகைச்சுவை என்பது என் உடம்புடன், உயிருடன் கூடவே பிறந்தது. எனவே கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனதால், என்னை சீரியசான ஆளாகப் பார்க்க முடியாது. நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். இந்தப் பதவியைக் கூடுதல் பொறுப்பாக நினைத்துச் செயல்படுவேன். 

 

அ.தி.மு.க.வில் சில வாரங்களாக அதிகார மட்டத்தில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு கட்சித் தலைமை முதலில் முட்டுக்கட்டை போட்டது. அடுத்து யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், பன்னீர் செல்வம் - எடப்பாடி இடையே பிரச்சனை இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம் தற்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்துள்ளார். இது தி.மு.க.விற்கு எந்த அளவிற்கு நெருக்கடி தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

 

Ad

 

பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடிக்கும் ஏதோ கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே பிரச்சனை என்பது போல அனைவரும் சொல்கிறார்கள். அவர்களுக்குள் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது அந்தப் பிரச்சனை பெரிய அளவில் வெளியே தெரிகிறது. மாமியாரிடம் கோபித்துக் கொண்டு, புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்போல, அவர் தேனிக்குச் சென்றார். அவரை சமாதானம் செய்ய மணிக்கு ஒரு அமைச்சர்கள் அங்கு சென்றார்கள். அதனைத் தொலைக்காட்சி சேனல்கள் பெரிய செய்தியாகப் போட்டார்கள். ஏதோ அக்னி நட்சத்திரம் கார்த்தி பிரபு போல அதனைப் பலர் பெரிய செய்தியாக்க பார்த்தார்கள். அந்த அமைச்சர் பன்னீருடன் சந்திப்பு, இந்த அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு என்று பரபரப்பைக் கூட்டினார். ஆனால் கடைசியில் பார்த்தால் எதிர்பார்த்தது போல் நடந்து முடிந்துள்ளது. 

 

இந்த மோதல், சண்டை எல்லாம் டுபாக்கூர் தனம்தான், இதில் எந்த உண்மையும் இல்லை. சண்டை மாதிரி மக்களுக்குக் காட்டிவிட்டு, தற்போது அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இவர்கள் சமாதானம் ஆனதற்கு மிக முக்கிய காரணம் பா.ஜ.க.வை சமாதானம் செய்வதற்குத்தான். இவர்கள் ஒன்றும் கொள்கைக்காகச் சண்டை போட்டவர்கள் கிடையாது அல்லது எம்.ஜி.ஆர் ஆட்சியை யார் தருவது என்பதற்காக அடித்துக் கொண்டதும் கிடையாது. அதற்கெல்லாம் இவர்களுக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது. இவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவில்லை. எனவே அதை எல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.க.வை திருப்திப்படுத்த வேண்டும், ஆறு மாசம் வண்டியை ஓட்ட வேண்டும் என்ற இரண்டு காரணங்களுக்காகவே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். என்றார்