
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்' என தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்கெனவே இருந்த அரசு நிராகரித்து, அவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது. அந்த நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்று 2021இல் ஆட்சிக்கும் வந்தது. ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்ததும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது.
தற்போது, தி.மு.க. அரசைக் கண்டித்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஓட்டுக்காகவும் ஆட்சிக்காகவும் உண்மையைச் சொல்லாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றிய தி.மு.க. அரசை. எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டப்பேரவையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். உரிய நேரம் என்றால் அது எந்த நேரம்? ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிவடையும் நிலையில் அந்த உரிய நேரம் இன்னும் வரவில்லையா?
அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அவர்களை நம்ப வைத்து அவர்களின் ஒட்டுக்களைப் பெறுவதற்காகத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடலாம் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்களா? அப்படி என்றால் அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது; அரசு ஊழியர்களும் ஆட்சியாளர்களும் பொய் வாக்குறுதிகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை என்பதை எங்கள் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு சுட்டிக் காட்டுகிறேன். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு, கொடுத்த வாக்குறுதியின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியது போல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்திற்கு எங்கள் வெற்றித் தலைவரின் அறிவுறுத்தலின்படி, தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவையும் அளிப்பதோடு, அவர்களின் நியாயமான தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.