Skip to main content

'கிண்டி வரை எங்களுக்கே சொந்தம்'..! முரண்டு பிடித்த ஆந்திராவும் வெற்றிபெற்ற தமிழ்நாடும்!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சுதந்திர இந்தியா இப்போது இருப்பது போல ஒரு விசாலமான நிர்வாகத்தின் கீழ் 1950களில் இயங்கவில்லை. தற்போது இருப்பது போல மொழி சார்ந்து மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அந்த இன மக்களால் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது, இந்தியாவில் இருந்த 14 மாநிலங்களிலும் நிலைமை இப்படியாகவே இருந்தது. இந்த 14 மாநிலங்களும் கூட மொழிவாரியாகவோ அல்லது இனக்குழுக்களாகவோ கூட அமைக்கப்படவில்லை. இன்றைய தமிழ்நாடு கூட அப்போது மதராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது.

இதில் தமிழக பகுதிகளோடு, கேரளாவின் பீ்ர்மேடு உள்ளிட்ட சில பகுதிகளும், ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட சில பகுதிகளும் அன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டுடன் இணைந்தே இருந்தது. இதன்காரணமாக அன்றைய ஆட்சியாளர்களுக்கு நிர்வாக ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதில் ஆரம்பித்த சிக்கல், பலவகைகளிலும் தொடர்ந்தது. இது அன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாலும், அருகருகே உள்ள மாநிலங்களிலும் இதே பிரச்னை இருந்துவந்தது. அதில் ஒருபடி மேலாக ஆந்திராவில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது. சிறிது சிறிதாக புகைந்துகொண்டிருந்த மொழிவாரி மாநிலக் கோரிக்கை 1953 ஆம் ஆண்டு ஆந்திராவில் உச்சத்தை அடைந்தது. பெரும் வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தி ஆந்திராவை சிதைத்துக் கொண்டிருந்தார்கள் போராட்டக்காரர்கள். மாநில அரசு தன்னுடைய முழு பலத்தை இறக்கியும், போராட்டத்தை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. 

 

xc



நிலைமை சிக்கலாவதை உணர்ந்த நேரு தலைமையிலான மத்திய அரசு மொழிவாரி மாநிலங்களை பிரிப்பதற்கு குழுக்களை அமைத்தது. ஆந்திராவில் ஆரம்பித்த போராட்டம் தமிழகத்திலும் அனலை கக்கியது. தொடர் உண்ணாவிரதங்களும், போராட்டங்களும் நடைபெற்றது. மாநில உணர்வு மேலெழுவதால் மத்திய அரசு பெரும் அச்சப்பட்டது என்றால் அது மிகையல்லை. கையறு நிலையில் இருந்த மத்திய அரசு, விரைவாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி மத்திய அரசு அமைத்த குழுக்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள குழ்நிலைகளை ஆராய்ந்தது. அந்த குழுக்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டது.

எப்படி மாநிலங்களை வகைப்படுத்தலாம் என்று ஒவ்வொரு மாநில அரசுகளிடம் அந்த குழுவினர் ஆலோசனை மேற்கொண்ட போது, சில மாநில அரசுகள் சொன்ன செய்தி அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ஆந்திர அரசு தமிழகத்தின் திருத்தணி உள்ளிட்ட சென்னையின் பெரும் பகுதிகளை (இன்றைய ஜாபர்கான் பேட்டை வரை) தங்கள் மாநிலத்துடன் சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு அல்லாமல் அதனை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆந்திராவின் கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழகம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை தங்களுடன் இணைக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டது. மேலும் ஆந்திராவின் கோரிக்கைக்கு எதிராக தமிழகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் பல்வேறு உயிரிழப்புக்களும் ஏற்பட்டது.

பின்னர் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு மத்திய அரசு 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தை பிரித்தது. அதன்படி, அதுவரை தமிழகத்தில் இருந்துவந்த சில பகுதிகளை மீண்டும் கேரளாவிற்கும், கேரளாவில் இருந்த கன்னியாகுமரியின் சில பகுதிகள் மீண்டும் தமிழகத்துக்கும் பிரிக்கப்பட்டது. ஆந்திராவின் சில பகுதிகளும் அவ்வாறே பிரிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களால் ஆந்திரா கேட்ட பெரும் பகுதிகளை மத்திய அரசு நிராகரித்து.

அந்த பகுதிகள் தமிழகத்திலேயே தொடரவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இவ்வாறு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரிலேயே அடுத்த 12 ஆண்டுகள் தமிழகம் அழைக்கப்பட்டது. பிறகு திமுக ஆட்சி அமைந்த பிறகு 1968ம் ஆண்டு அந்த பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இந்த தினத்தை 'தமிழ்நாடு நாள்' என்று நாம் தற்போது கொண்டாடி வருகிறோம்.