Skip to main content

சுர்ஜித்தின் கையை மட்டும் தானே எடுத்தீர்கள்..? கொதிக்கும் அருணன்!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சுர்ஜித் மீட்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் நீங்கள் கருத்து தெரிவித்து இருந்தீர்கள். உயிரோடு மீட்க முடியாத குழந்தையை, பிணமாக மீ்ட்டது எப்படி?  நள்ளிரவில் நடந்தது என்ன? என்று ட்விட்டரில் சந்தேகம் எழுப்பி இருந்தீர்கள். அந்த கருத்துக்காக ட்விட்டரில் எதிர்வினைகளையும் நீங்கள் சந்தித்தீர்கள். சுர்ஜித் மீட்பு நடவடிக்கை அரசியலாக்கப்படுகிறதா?

சரியான முறையில் அது அரசியல் ஆக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். குறை சொல்வதற்கு என்று அரசியல் செய்வது என்பது வேறு, தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டுவது என்பது வேறு. ஒரு இரண்டு வயது குழந்தை துடிதுடித்து இறந்து போகிறது. இந்த விஞ்ஞான உலகத்தில் அந்த குழந்தையை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. அவனை முறையாக மீட்க நம்மிடம் கருவிகள் இல்லை என்கிறார்கள். இதனை எப்படி கடந்து செல்ல முடியும். இதை கேட்பதை விட அரசியல்வாதிகளுக்கு என்ன அரசியல் இருக்கப்போகிறது. அரசியல் என்றால் எம்.பி, எம்.எல்.ஏ ஆவது மட்டும் கிடையாது. நான் ஏன் அந்த பதிவை போட்டேன் என்றால், சுர்ஜித்தின் இழப்பு தனிப்பட்ட வகையில் என்னை பாதித்தது. ஏனென்றால் அதே வயதுடைய பேத்தி எனக்கு உண்டு. அதனால் அந்த குழந்தையின் இழப்பை பற்றிய வலி தெரியும். குழந்தை விழுந்த அந்த மூன்று நாட்களும் நான் அந்த சம்பவத்தை தொலைக்காட்சிகளில் உற்று நோக்கி வந்தேன். குழந்தையை மீ்ட்க புதுபுது முயற்சிகளில் ஈடுபடுவதாக அரசு தரப்பில் தெரிவித்தார்கள். ஆனால் அவற்றை முறையாக செய்தார்களா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. இயந்திரத்தை வைத்து பாதி தோண்டுகிறார்கள், பிறகு நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாட்டை செய்கிறீர்கள்.
 

c



அப்படி என்றால் இதில் செலவிடப்பட்ட நேரம் விரயம் தானே? முறையான திட்டமிடல் இல்லை என்பதே எங்களின் குற்றச்சாட்டு. எத்தனை நாள் வேலை செய்தீர்கள் என்பதல்ல பிரச்னை. என்ன சாதீத்திர்கள் என்பதே கேள்வி. அந்த விதத்தில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்தது என்றுதான் கூற வேண்டும். மீட்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சி ஒளிப்பரப்பு  நிறுத்தப்படுகிறது. நள்ளிரவில் உடலை மீட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு கவரில் குழந்தையை எடுத்து வருவது போன்ற காட்சிகள் அடுத்தநாள் தொலைக்காட்சிகளில் வந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். பல நாட்களாக போராடி மீட்க முடியாமல் சிரம்மப்பட்ட மீட்புபடையினர் எப்படி சில மணி நேரங்களில் உடலை மீட்டார்கள். இது மட்டும் எளிதாக மீட்க முடிந்ததன் மர்மம் என்ன?  அதுவும் முழு உடலை மீட்கவில்லை என்று சில தொலைக்காட்சிகளில் மீட்புப்படையினர் கூறியதை நாம் கேட்டிருப்போம்.

கையை ஏர் லாக் செய்திருந்ததால் அதன்வழியாக மீட்டோம் என்று அதில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். உடலை கூட மீட்க முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோமா? என்ற கேள்வி இயல்பாகவே நாம் அனைவருக்கும் எழும். நாங்கள் கையை மட்டும்தான் மீட்டோம் என்று ஏன் இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. சிறுவனின் பெற்றோர் ஆழ்துளை கிணற்றுக்கு மாலையிட்டு வணங்குவதே அரசாங்கம் இந்த விஷயத்தில் பொய் சொல்கிறது என்பதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள போதுமானது. இரவு பகலாக மீட்பு நடவடிக்கை நடந்தால் அதை பாராட்ட வேண்டும் என்பது கட்டாயம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எதிர்த்து கேள்வி கேட்டால், அதுவும் எதிர்கட்சி தலைவரை பார்த்து நீங்கள் என்ன விஞ்ஞானியா? என்று முதல்வர் கேட்கிறார். ஒரு விஷயத்தில் சந்தேகத்தை எதிர்கட்சிகள் எழுப்பினால் அதற்கு உரிய பதிலை சொல்லாமல் அவர்களை விமர்சனம் செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். தவற்றை சுட்டிக்காட்டத் தானே எதிர்க்கட்சிகள். அரசை பற்றி யாரும் பேசவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகநாட்டிற்கு உகந்ததா. முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரைகாப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதைப்பற்றி சொன்னால் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சொல்பவரை தாக்குகிறார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லை என்பதே என்னுடைய எண்ணம்.