Skip to main content

நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ்! கரை சேருமா? -குட்டையைக் குழப்பும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.! 

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
ccc

 

 

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று 2019ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி உதறியதிலிருந்தே மிக கடுமையான விமர்சனங்களை கடந்த ஓராண்டாக எதிர்கொண்டு வருகிறது அக்கட்சி. நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள் என ராகுல் சொன்னது காங்கிரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாததால் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியாகாந்தி. அவர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையிலும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுகிறது காங்கிரஸ்.

 

இதனால், அது குறித்த பா.ஜ.க.வினரின் கடுமையான விமர்சனங்களும் ஓயவில்லை. இதற்கிடையே, நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்தெடுக்கப்பட வேண்டும் என்கிற ராகுல்காந்தியின் கருத்தை அவரது சகோதரி பிரியங்காகாந்தியும் வழிமொழிந்திருப்பது தற்போது பூதாகரமாகி வருகிறது. பிரியங்காவின் அத்தகைய கருத்து காங்கிரசுக்கு சாதகமா? பாதகமா? என்கிற விவாதங்களும் தேசிய அளவில் எதிரொலிக்கின்றன.

 


இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூரிடம் விவாதித்தபோது, ""நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பற்றி காங்கிரஸின் காரிய கமிட்டி கூடி விவாதித்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல்காந்தி, நேரு குடும்பத்தை சாராத ஒருவரை புதிய தலைவராக தேர்ந்தெடுங்கள்'' என சொன்னார். கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில்தான் அப்படி சொன்னாரே தவிர, பொது வெளியில் அவர் சொல்லவில்லை. ஆனால், கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியவை ஊடகங்களில் வெளியானதை வைத்து சர்ச்சையாக்கியது பா.ஜ.க. இந்த சூழலில், அரசியல் தலைவர்களின் அடுத்த தலைமுறையினருடன் உரையாடல்’ என்கிற புத்தகத்தை பிரதீப்சிபர் மற்றும் ஹர்ஷா ஆகிய இரண்டு பேர் எழுதினர். அந்த புத்தகத்திற்காக, ராகுலின் கருத்து குறித்து பிரியங்கா காந்தியிடம் நூலாசிரியர்கள் கேட்டதற்கு, ""என் சகோதரரின் கருத்தை நான் வழிமொழிகிறேன்'' என சொன்னார். பிரியங்காவின் அந்த கருத்து கடந்த வருடம் ஜூலை மாதமே வெளியாகி பிறகு அடங்கிப்போனது.

 

congress

 

அந்த புத்தகத்தின் வரிகளைத்தான் தற்போது தூக்கி வைத்துக்கொண்டு பாஜகவும் ஆர்.எஸ். எஸ்.சும் மீண்டும் பூதாகரமாக்கி வருகின்றன. காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டுமென்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை. அதற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ராகுல்காந்தி. இப்போது பிரியங்காவும் அதில் சேர்ந்திருப்பது அவர்களுக்கு இரட்டைத் தலை வலியைத் தருகிறது. ராகுல்காந்தி, சின்னதாக ஒரு ட்வீட் போட்டாலே பா.ஜ.க. அமைச்சர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். காங்கிரசுக்கு மீண்டும் ராகுல்காந்தி தலைவராக வந்துவிடக்கூடாது என துடிக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க.வுக்கு பயம் இருக்கிறது. அதனால்தான் நீர்த்துப்போன ஒரு விசயத்தை மீண்டும் கிளறுகிறார்கள்.

 

மேலும், எங்கள் கட்சியிலேயே தலைவர் பதவியை எதிர்பார்க்கும் சிலர், பா.ஜ.க.வினரை தூண்டிவிட்டு காய்களை நகர்த்துகிறார்கள். அது வெற்றி பெறாது. நேரு குடும்பத்தைத் தவிர்த்து மற்றொருவரை தலைவராக நினைத்துக்கூட பார்க்க முடியாது. ராகுல் காந்தியின் தலைமைதான் காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும்; வலிமைப்படுத்தும். நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக வந்தால், காங்கிரஸுக்கு பாதகம் என்பதைத் தாண்டி எதிரிகளுக்கு சாதகமாகி விடும். அதற்கு இடம் தர நினைக்கும் துரோகிகளை களை எடுக்க வேண்டும்‘’ என்கிறார் மிக அழுத்தமாக.

 

சோனியாவுக்கு உடல்நலம் சரியில்லாததையும், ராகுல்-பிரியங்காவுக்கு தலைமைப் பதவிக்கு விருப்பமில்லாமல் இருப்பதையும் சாதகமாக பயன்படுத்தி மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, மனீஸ்திவாரி, சசி தரூர் உள்ளிட்ட பலர், தலைவர் பதவியை குறி வைத்து இயங்குவதாக காங்கிரஸ் மேலிடத்தில் பரவி கிடக்கிறது. மற்ற மூவர்களை விட சசி தரூர் வெளிப்படையாகவே தலைவர் பதவி குறித்து பல கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்.

 

congress

ராகுல்-பிரியங்காவின் கருத்து குறித்து பேசும் சசிதரூர், ""இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தலைவராக இருக்கிறார் என்பதற்காகவே தலைமை பொறுப்பு என்கிற சுமையை அவர் சுமப்பார் என எதிர்பார்ப்பது சரி அல்ல! ராகுல் விரும்பாத பட்சத்தில் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகளை உடனடியாகத் துவக்க வேண்டும். மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரஸ் இருக்கக்கூடாது. காங்கிரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதன் மூலமே முற்றுப் புள்ளி வைக்க முடியும்'' என்கிறார்.

 

இதுகுறித்து மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ""நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சித் தலைமைக்கு வரமுடியும். ஆனால், நேரு குடும்பத்திலிருந்து தலைவராக வருபவரால் மட்டுமே காங்கிரஸை வலிமை பெற வைக்க முடியும். நேரு குடும்பத்தினர் இல்லாத காங்கிரசை எளிதாக வீழ்த்திடலாம் என பாஜக நினைக்கிறது. அதற்காகத்தான், இத்தகைய சர்ச்சைகளை ஊதி விடுகின்றனர். அதனால் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வர வேண்டும்'' என்கிறார்.


cc
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலே, ""பிரதமர் மோடி அரசின் மோசமான தாக்குதல் களால் தேசம் பின்னடைவை சந்தித்து வருகிறது. மோடி-அமித்ஷா கூட்டணியின் தாக்குதல்களை பயமின்றி எதிர்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் ராகுல் வெளிப்படுத்திய துணிச்சல், பா.ஜ.க. தலைவர்களுக்கு அச்சத்தையும், கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் தந்தது. அப்படிப்பட்ட சமரசமில்லாத துணிச்சலும், அச்சமின்மையும்தான் காங்கிரஸ் தலைமைக்கு இப்போது தேவை'' என்கிறார் அதிரடியாக.

 

பாஜக-ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியலை எதிர்கொள்ள நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே முடியும் என்கிற நிலையில், கடந்த ஓராண்டாக புதிய தலைவர் நியமிக்கப் படாதது தேசிய அளவில் காங்கிரசுக்கு சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ்காந்தி மறைவுக்குப் பிறகு, தலைமைப் பொறுப்பேற்ற நேரு குடும்பம் அல்லாத நரசிம்மராவ், சீதாராம் கேசரி போன்றவர் களால் காங்கிரஸ் எந்த வலிமையையும் பெற வில்லை என்பதையும், சோனியா காந்தி தலைமை யில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடைந்ததையும், சுட்டிக்காட்டும் காங்கிரசார், மூத்த தலைவர் ஒருவரையோ அல்லது இளம் தலைவர் ஒருவரையோ கொண்டு வந்தால் கட்சி பிளவுபடும் என்றும் கூறுகிறார்கள்.

 

அதனால், ராகுல்காந்தியை பொறுப்பேற்க வைக்க வேண்டும். அவர் தலைவராவதில்லை என்ற தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தால் பிரியங்காகாந்தியை தலைவராக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்பதை மூத்த தலைவர்களும் இளம் தலைவர்களும் தலைமைக்கு அழுத்தம் தருகின்றனர். ஏற்கனவே, பிரியங்காவின் அரசியல் வருகை பாஜகவிற்கு அச்சத்தைத் தந்துள்ளது. அதனால் தான், அரசு பங்களாவிலிருந்து அவரை வெளி யேற்றி அதன் மூலம் அவரது இமேஜை உடைக்க முயற்சித்தனர் பா.ஜ.க.வினர். மேலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க நினைத்த பாஜகவின் மறைமுக சதியை முறியடித்து ஆட்சியை பாதுகாத்ததில் பிரியங்காவின் பங்களிப்பு அதிகம்.

 

ராகுலின் மனதை மாற்றுவது அல்லது பிரியங்காவை கொண்டு வருவது என மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, அகமதுபடேல், மல்லிகார்ஜுனகார்கே, கமல்நாத், குலாம்நபி ஆசாத், கபில்சிபில் போன்ற சீனியர்கள் முயற்சித்து வருகின்றனர். இனியும் காலம் தாழ்த்துவது, மாநில அளவில் காங்கிரஸை பலவீனமாக்கும் என்பதையும், தலைமை இல்லாததால்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை பாஜக உடைக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவதில்லை என்பதையும் சோனியாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

 

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரால், பா.ஜ.க. அரசியலை நிலையாக எதிர்கொள்வது கடினம் என்பதுடன், காங்கிரசில் யாருக்கும் அத்தகைய வலிமை கிடையாது. மேலும், நேரு குடும்பம் அல்லாத எவர் ஒருவரை தலைவராக கொண்டு வந்தாலும், அவருக்கான முழு ஒத்துழைப்பு கிடைக் காது என்பதால் மாநில அளவில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இது தேர்தல் வெற்றிக்கு உதவாது. ஒரு கட்டத்தில் அந்த தலைவரை பாஜக-ஆர்.எஸ். எஸ். வளைத்து விடுகிற அபாயம் கூட உண்டு.

 

அதனால், மோடிக்கு எதிராக மக்களிடம் தற்போது மௌனமாக வீசும் அலை, இனிவரும் காலங்களில் வெளிப்படையாக வீசும் என்கிற நிலையில், மாநிலங்கள் தோறும் சரிந்து கிடக்கும் காங்கிரசின் செல்வாக்கை எழுச்சிப் பெற வைக்கும் ஆற்றல் நேரு குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கிறது. அவர்களது தலைமையில்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்; இருக்கவும் முடியும் என்பதையும் தற்போது சோனியாவிடம் எடுத்துச் சொல்லி வருகின்றனர்.
 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.