
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் மனித உடல் பிரேதப் பரிசோதனையில் எடுக்கப்படும் உடல் உறுப்புகள் கட்டைப் பைகளில் அடைக்கப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் நிலைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்து உயிரிழப்புகள், கொலைகள், தற்கொலைகள் உள்ளிட்ட சம்பவங்களில் கைப்பற்றப்படும் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் இறப்பில் சந்தேகம் உள்ளவர்களின் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அப்புறப்படுத்தப்படும் உடல் உறுப்புகள் சாதாரண கட்டைப் பைகளில் கட்டப்பட்டு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் தொங்க விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் உறுப்புகளை பாதுகாப்பதற்காக தனியாக பிரத்தியேக அறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.