Skip to main content

புறக்கணிக்கப்பட்ட ‘அயன் லேடி’ ஜெயலலிதா!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

ஜெயலலிதா இருந்தபோதும் சரி, இறந்தபிறகும் சரி, அவரை மிகப்பெரிய திறமையாளர் என்றும், போல்டான பெண்மணி என்றும், எதற்கும் அசராத இரும்புப் பெண்மணி என்றும், பலமொழி அறிந்த அறிஞர் என்றும் சொந்தக் கட்சியினரும், அவரால் பலனடைந்தவர்களும், மீடியாக்களும் அள்ளிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

 

ஆனால், அவர் இறந்ததே மிகப்பெரிய மர்மமாக இன்னும் நீடிக்கிறது. இத்தனைக்கும் மத்திய அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் காவல் காத்தார்கள். வெளிநாட்டு மருத்துவர்களும், இந்தியாவின் உயரிய எஸ்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்த அந்த இரும்புப் பெண்மணியின் சாவிலேயே சந்தேகம் தெரிவித்தார்கள்.

 

75 நாட்கள் மருத்துவமனையிலேயே காவல் காத்து, அவ்வப்போது, ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்று மீடியாக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்த அமைச்சர்களே இந்தச் சந்தேகத்தை எழுப்பினார்கள்.

 

மாநில ஆளுநர், மத்திய அமைச்சர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரையும் இவர்கள் சந்தேகக் கூண்டில் நிறுத்தினார்கள். ஆனால், அவர்கள் மட்டும் அந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க நினைத்தார்கள்.

 

எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை மட்டுமே சிக்க வைக்கும் குறுகிய நோக்கத்தில் இவர்கள் யோக்கியர்களாக வேஷம் போட்டது வெட்ட வெளிச்சமாகத்தான் போகிறது.

 

அதற்கிடையே, இப்போது, அம்மாவின் பேரை நாரடித்துவிட்டு, இப்போ ரொம்ப நல்ல பிள்ளைகளாய் சட்டமன்றத்தில் படம் திறக்கிறார்கள். இந்த படத்தை திறந்துவைக்க மோடியைக் கூப்பிட்டாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை கூப்பிட்டாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் கூப்பிட்டாக, பக்கத்து மாநில முதல்வர்களையெல்லாம் கூப்பிட்டாக…

 jaya

 

ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் திறக்க வேண்டிய படத்தை சட்டமன்றத்தில் திறப்பதா என்று பதறிப்போய் மறுத்துவிட்டார்கள். இத்தனை நாள் காத்திருந்து, ஆட்சி முடிவதற்குள் தாங்களே திறந்து வைக்க முடிவு செய்தார்கள்.

 

தமிழக எதிர்க்கட்சிகள் யாருமே வரவேற்காத நிலையில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் மைனாரிட்டி எண்ணிக்கை உறுப்பினர்களே பங்கேற்று ஜெயலலிதா படத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

 

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று, உயிரோடு இருந்திருந்தால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டியவர் ஜெயலலிதா. அவருடைய படத்தை சட்டமன்றத்தின் மரபை மீறி சபாநாயகரே திறந்து வைத்திருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

 

அரசுத் திட்டங்களிலும், அரசு விழாக்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு அதன்மீது தீர்ப்பு வரவேண்டியிருக்கிறது. அதற்குள் இப்போது சட்டமன்றத்திலேயே அவருடைய படத்தை திறந்து வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

 

இந்த நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருக்கிறார். ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது தமிழ்நாட்டின் அவமானம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

''போலி பொதுச்செயலாளர் பழனிசாமி சொன்ன ஒரே ஒரு உண்மை இதுதான்'-ஓபிஎஸ் பேச்சு

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
"This is the only truth told by fake General Secretary Palaniswami" - OPS speech

'என்னை முதல்வராக நியமனம் செய்த ஜெயலலிதாவும் சசிகலாவும் கேட்டார்கள் கொடுத்துவிட்டேன். ஆனால் பழனிசாமி, உன்னை யாரு முதலமைச்சராக நியமனம் செய்தது?' என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனியில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ் உரையாற்றினார். அவர் பேசுகையில், ''நம்முடைய இயக்கத்தை கபளீகரம்   செய்திருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன செய்வீர்கள் நல்ல சத்தம் போட்டு சொல்லுங்கள். இன்னும் நன்றாக சொல்லுங்கள். இன்றைக்கு உங்களுடைய எழுச்சி பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை எம்ஜிஆர் இருந்த காலத்திலும், அவருக்குப் பிறகு ஜெயலலிதா இருந்த காலத்தில் தான் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அதே கூட்டத்தை ஒருங்கிணைந்து பார்க்கின்ற பொழுது இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

அந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்திருக்கின்ற நிர்வாகத்தில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியும் வணக்கத்தையும் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.  1972ல் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, கழகம் எந்த வழியில் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும்; நீதியின் வழியில் நடக்க வேண்டும்; தொண்டர்கள் தான் அதிமுகவின் அடிநாதம் கவசம் என்று சொல்லி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பல சட்ட விதிகளை எம்.ஜி.ஆர் வகுத்து தந்தார்.

அவர் வகுத்த சட்ட விதிகளின்படி தான் ஜெயலலிதாவும் 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கி நம் கையில் தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு விதியை மட்டும் எந்த காலத்திலும் மாறுதல் செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் அந்த சட்டவிதியில் சேர்த்து இருந்தார். ஆனால் இன்றைக்கு போலி பொதுச் செயலாளராக பழனிசாமி என்ற ஒரு நபர் அதிமுகவை எப்படி கபளீகரம் செய்தார் என்று உங்களுக்கு தெரியும்.

ஜெயலலிதா என்னை இரண்டு முறை முதலமைச்சராக நியமனம் செய்தார். மூன்றாம் முறையாக சசிகலா தான் என்னை முதலமைச்சராக நியமனம் செய்தார். என்னை நியமனம் செய்த ஜெயலலிதாவும் சசிகலாவும் கேட்டார்கள் கொடுத்துவிட்டேன். ஆனால் பழனிசாமி, உன்னை யாரு முதலமைச்சராக நியமனம் செய்தது? அவரே ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டார். அவர் பல தியாகங்கள் செய்து படிப்படியாக நடந்து வந்து ஊர்ந்து ஊர்ந்து போய் நான் முதலமைச்சராக பதவியேற்றேன் என்று சொன்னார். உண்மையிலேயே பழனிசாமி ஊர்ந்து ஊர்ந்து தான் சசிகலா காலில் விழுந்து தான் பதவியைப் பெற்றார் என்பதுதான் நாடறிந்த உண்மை'' என்றார்.

Next Story

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
ADMK with pmk Renegotiate
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.