திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு ஒன்றிய பகுதியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் திமுகவினர் பல்வேறு கிராமங்களில் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். நிலவேம்பு கசாயம் போல் கபசுர குடிநீர் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை கொண்டதால் பொதுமக்களும் கபசுர குடிநீரை வாங்கிப் பருகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கன்னிப்பட்டி ஊராட்சிகள் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் வத்தலக்குண்டு ஒன்றியக்குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க அதே பகுதி ஊராட்சி உறுப்பினர் சர்மிளா ஷாஜகான் உதவியுடன் கேன் நிறைய கபசுர குடி நீரை நிரப்பிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் யூனியன் சேர்மன் பரமேஸ்வரி முருகன் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாகச் சென்று வீடு வீடாக வாகனத்தை நிறுத்தி கபசுர குடிநீரைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். அவருடன் ஊராட்சித் தலைவர் ரமேஷ் மட்டும் உதவிக்குச் செல்கிறார். கபசுர குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக யூனியன் சேர்மன் பரமேஸ்வரி முருகன் தெரிவித்தார்.