காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 31 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை இன்று முதல் நின்ற கோலத்தில் மக்கள் தரிசித்து வருகின்றனர். ஆனாலும் முன்னைய நாட்களைவிட எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு தரிசனத்திற்காக வரும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது.

நேற்றுவரை அத்திவரதரை சயனகோலத்தில் மக்கள் தரிசித்து வந்த நிலையில் இன்று அத்திவரதரை நின்ற கோலத்திற்கு ஆகம விதிப்படி மாற்றியமைக்க நேற்று மதியமே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுர நடை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5.25 மணிமுதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் மக்கள் தரிசித்து வருகின்றனர்.
கடந்த 31 நாட்கள் சயன கோலத்தில் தரிசனம் தந்த அத்திவரதர் ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சிதர இருக்கிறார். இந்நிலையில் இன்று காலையில் இருந்து எப்போதும் இல்லாத அளவு மக்கள் கூட்டம் சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில், இன்று அத்திவரதரை தரிசிக்க மோடி வர இருக்கிறார் அதனால் போலீசாரின் கெடுபிடிகள் அதிமாக இருக்கும், மேலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண மக்கள் கூட்டம் என்றுமில்லாத அளவு அலைமோதும் என பரவியது. இதன் காரணமாகவே கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சயன கோலத்தில் இதுவரை அத்திவரதரை 47 லட்சம் பேர் தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.