
கன்னியாகுமரியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது தாளக்குடி கிராமம். இந்த கிராமத்திற்கு புத்தேரி மார்க்கமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தாளக்குடி சென்ற அரசு பேருந்து அங்கிருந்து மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்துகொண்டிருந்த பொழுது புத்தேரி பகுதியில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 32 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் பேருந்தில் படுகாயங்களுடன் சிக்கியவர்களை மீட்டு மேலே கொண்டு வந்து ஆசாரிபள்ளம் மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.