Skip to main content

ராணுவ உடையில் வாழ்வை முடித்துக் கொண்ட முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர்

Published on 23/05/2025 | Edited on 23/05/2025
'After making a request to the Chief Minister' - Former Border Guard soldier ends his life in military uniform

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி நாகுடி அருகில் உள்ள தேடாக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மகன் குணசேகரன் (57). தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். இவர் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக இருந்து தலையில் காயமடைந்ததால் பணி தொடர முடியாமல் இடை விடுப்பில் வந்துவிட்டார்.  இவர் புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிக சங்க தலைவராகவும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள் உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்து வந்த பிறகு நண்பர்களுடன் இணைந்து நாகுடியில் ஒரு தனியார் பள்ளியை நடத்தியுள்ளார். தொடர்ந்து நாகுடி கடைவீதியில் ஆங்கில மருந்து கடை ஒன்றும் நடத்தி வருகிறார். கடன் சுமை ஒருபக்கம் அழுத்திக் கொண்டிருக்க, தனக்கு தரவேண்டியவர்களும் பணம் தராமல் ஏமாற்றி வருவதாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று வியாழக்கிழமை இரவு அவரது மருத்துவ நண்பர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து சில தகவல்களை அனுப்பியுள்ளார். விரக்தியின் உச்சத்தில் இருந்து தகவல் வருவதை உணர்ந்த நண்பர்கள் குணசேகரனை வெவ்வேறு இடங்களில் தேடி கடைசியாக நாகுடியில் உள்ள அந்த தனியார் பள்ளிக்கு சென்று பார்த்த போது 'தான் விரும்பி ஏற்றுக் கொண்ட எல்லைப் பாதுகாப்பு உடையில்' தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்து கதறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது மரணத்திற்கு பிறகே அவர் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் வெளிவரத் தொடங்கியது.

அந்த குறுஞ்செய்தியில், என் இந்த நிலைக்கு காரணம் என்று பலரது பெயர்களை குறிப்பிட்டுள்ளவர் ஒரு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெயரைக் குறிப்பிட்டு, நான் ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய 21 கிராம் தங்க நகைகளை கேட்டு மிரட்டினார். அந்தப் பெண் எனக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது என்று சொல்வதை கேட்கவே இல்லை. நாளை நகை தரவில்லை என்றால் கடையை பூட்டுவேன் என்று மிரட்டினார். "எனது மரணத்தினால் உண்மையான இழப்பு எனது இரண்டு மகள்களுக்குதான்.." பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டேன். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எல்லா உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டேன். எனது மாமனாருக்கு பெரிய அசிங்கத்தை உருவாக்கிவிட்டேன். என்து மாமனாரே தவறான ஒருவனுக்கு தன் மகளை கட்டிவிட்டேன் என வருந்தும் அளவிற்கு வாழத் தகுதியற்ற மனிதன் ஆகி விட்டேன்.

சதி என்ற வலையில் சிக்கி மீள முடியாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதும் விதிகளின் கோரமுகங்களில் ஒன்றா? என்று பதிவுகள் அனுப்பியவர் அடுத்த பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து எழுதிய பதிவில்..

'நான் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி எல்லையில் தலையில் அடிபட்ட விபத்து காரணமாக இடை விடுப்பில் பணியை தொடர முடியாமல் வந்தவன். ஆகையால் என் மகள்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகள் வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.'

இந்தப் பதிவுகளையடுத்து சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மாற்றம் செய்து அவரது மரண வாக்குமூலமான பதிவுகள் அடிப்படையில் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போலிசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்