
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த அறிக்கையில் கீழடியில் ஆய்வு துவக்கப்பட்டது முதல், என்னென்ன ஆய்வு நடத்தப்பட்டது. அதில் என்னென்ன பொருட்கள் கிடைத்தது, அதன் தொன்மை காலம் போன்றவையெல்லாம் அறிவியல் ரீதியாகக் கணக்கிடப்பட்டது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கையைத் திருத்தி எழுதும்படியும், திருத்தம் தேவை என்றும் இந்தியத் தொல்லியல் துறை (A.S.I. - Archaeological Survey of India) இயக்குநர் ஹேமா மாசாகர் நாயக், அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குத் திருப்பி அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் அறிக்கையைத் திருத்தி எழுதும்படி அனுப்பப்பட்ட அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறை இயக்குநருக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பதிலில், “கீழடி குறித்து மிகச் சரியாகவே அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதனுடைய மண் அடுக்குகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மண் அடுக்குகளின் காலம், அதன் தொன்மை குறித்து அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது எந்தெந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அது எவ்வாறு உறுதி செய்யப்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் மிகச் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதில் திருத்தம் செய்யத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.