
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி கடந்த 04/04/2025 அன்று முடிவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் வக்ஃப் வாரிய மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையில் 128 எம்பிகள் ஆதரவு அளித்தனர். 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்த நிலையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்த வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை, திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். மசோதாவின் மீது பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவாகவும் பேசாமல் எதிராகவும் பேசாமல் மசோதாவை எதிர்த்து வாக்களித்திருந்தார். அதேநேரம் ஜி.கே.வாசன் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்கு செலுத்தியுள்ளார். பாமக எம்.பி அன்புமணி இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. நியமனஎம்பியாக தேர்வு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வேலை நாட்கள் தொடர்பான எம்பிக்களின் வருகை பதிவு விவரங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணையப்பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஜன.31 முதல் ஏப்.4 ஆம் தேதி வரையிலான மொத்த 26 வேலை நாட்களில் பாமக உறுப்பினர் அன்புமணி வெறும் 6 நாட்கள் மட்டுமே மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். (வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பு நாளன்றும் பங்கேற்கவில்லை) நியமன எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா இரண்டு நாட்கள் கலந்துகொண்டுள்ளார். திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, கிரிராஜன் அகியோரும், அதிமுக எம்பி தம்பிதுரையும் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பாமக அன்புமணி இதற்கு முன்பே நாடாளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகளில் பங்கேற்காது ஆப்சென்ட் ஆவதாக அவர் மீது விமர்சனங்களை எழுந்திருந்த நிலையில் அதிக நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வெறும் 6 நாட்கள் மட்டுமே சென்றுள்ளதும், மிக முக்கிய மசோதாவின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததும் விமர்சனமாகியிருக்கிறது.