Skip to main content

இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? - அமைச்சர் சேகர்பாபுவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Published on 17/04/2025 | Edited on 17/04/2025

 

Nainar Nagendran says Minister Sekarbabu should publicly apologize

தமிழக சட்டசபையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மானியக் கோரிக்கையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

அதில் கலைஞர் சமாதியில், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு தமிழக அரசின் சின்னமும், இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மறைந்த கலைஞரின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

‘பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி’ என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்