
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து அறிவிப்பை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று நடந்த செய்தியாளர்களைச் சந்திப்பின் போது தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது, 2026இல் கூட்டணி ஆட்சியா என்று செய்தியாளர்கள் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமித்ஷா, “நாங்கள் இணைந்து தான் இங்கு ஆட்சி அமைக்கப் போகிறோம். 2026இல் கூட்டணி ஆட்சி தான் நடைபெறப் போகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தான் இந்த கூட்டணி நடைபெறப் போகிறது” எனக் கூறினார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையப் போகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தமிழக அரசியல் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூறுகையில்“கூட்டணி ஆட்சி அமைப்பதாக அமித்ஷா கூறவே இல்லை. ஆட்சியில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி அமையும் என்று தான் கூறினோம். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என அமித்ஷா தெளிவாகக் கூறினார்” என்று கூறினார்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்ர். அதற்கு நயினார் நாகேந்திரன், “கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள். கூட்டணி குறித்துப் பேசியது அகில இந்தியத் தலைமை. எனவே இது தொடர்பாகவும் அகில இந்த தலைமை பேசும்” எனத் தெரிவித்தார். இதனால், கூட்டணி ஆட்சி குறித்த விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது

இந்த நிலையில், அதிமுக எம்.பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரியான முறையில் நேற்று கூறியிருக்கிறார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் போன்றவர்கள் இதுவரை கூட்டணி ஆட்சியை அமைத்ததில்லை. 2006இல் தனிப் பெரும்பான்மை இல்லாத போது கூட்டணி ஆட்சியைக் கலைஞர் அமைக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் கிடையாது, இனியும் கிடையாது, தமிழ்நாட்டில் 2026இல் எடப்பாடி பழனிசாமி தனியாகத் தான் ஆட்சி அமைப்பார்” என்று தெரிவித்தார்.