
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் விழா இன்று (17-04-25) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தீரன் சின்னமலையின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தாய்மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காக போராடி துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரை போற்றி வணங்குகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தீரன் சின்னமலையின் திருவுறுவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.