
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி (23.10.2022) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் 4வது கூடுதல் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது. அதன்படி இந்த வழக்கில் இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேலும் 5 பேர் மீது தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 - 22ஆம் ஆண்டுக் காலத்தில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக மோசடி செய்துள்ளனர். அந்த பணத்தைக் கொண்டு கார் குண்டு வெடிப்புக்குத் தேவையான வெடி பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதான அமீர், மற்றும் உமர் பாரூக் ஆகியோர் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடி செய்ய இவர்கள் இருவருக்கும் பாவாஸ், சரண் மற்றும் அபு ஹனிபா ஆகியோரும் நிதி அளித்ததும் தெரியவந்துள்ளது.