
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்குகள் இன்று (17.04.2025) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” எனக் கூறி வக்ஃப் புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, “இந்த விவகாரத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும். அதே சமயம், 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் முடித்து வைத்ததாகக் கருதப்படும்.
விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு எந்த 5 மனுக்கள் என்பதை தேர்வு செய்து கூறுவோம்” எனத் தெரிவித்து இந்த வழக்கை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வக்ஃபு திருத்தச் சட்டம், 2025ஐ எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரித்ததற்கும், வக்ஃபு சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், வக்ஃபு வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுப்பதற்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.
இஸ்லாமிய சமூகத்தின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய மத நடைமுறைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதன் மூலம், அவர்களை குறிவைத்து தாக்கும் ஒரே நோக்கத்துடன், இந்த தவறான திருத்தச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. திமுகவால் சுட்டிக்காட்டப்பட்டபடி, இச்சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு செய்ததில் மகிழ்ச்சி. சிறுபான்மையின சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்”எனக் குறிப்பிட்டுள்ளார்.