Skip to main content

“தக்க பதிலடி கொடுக்கப்படும்” - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை 

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

 Union Defence Minister Rajnath Singh says A befitting reply will be given about pahalgam incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், காஷ்மீர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். 

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களுக்கு மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு, இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள். குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்