
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்விஇஎஸ்(SVES) விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ் (SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளும் அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து தண்டனை தரும் வரை ஓயமாட்டோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே ஒன்றுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு; விமானப்படை; கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாபாத்தில் இருந்து அழைக்கப்படுவர். தூதராக உதவிகளை குறைக்கவும், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் தெரிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் நாளை(24/04/2025) அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.