Skip to main content

பயங்கரவாத தாக்குதலில் பலியான கப்பல் படை அதிகாரி; திருமணமான 7 நாளில் நடந்த சோக சம்பவம்!

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

Tragic incident 7 days after wedding by Navyofficer thrash in pahalgam incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், காஷ்மீர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களது வேதனைகளைத் தெரிவித்து வருவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தை கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில், 6 நாள்களுக்கு முன்பு திருமணமான புது தம்பதி தேனிலவுக்காக காஷ்மீருக்கு வந்த போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் கப்பல் படை அதிகாரி பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியைச் சேர்ந்த இந்திய கப்பல் படையின் லெப்டினண்ட் அதிகாரி 26 வயதான வினய் நர்வாலுக்கும், ஹிமான்சி நர்வாலுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு திருமண வரவேற்பு நடைபெற்றது. அதன் பின்னர், தேனிலவுக்காக புதுமணத் தம்பதி நேற்று முன் தினம் (21-04-25) காஷ்மீருக்குச் சென்றுள்ளனர். 

நேற்று அவர்கள் பஹல்காமுக்கு அருகில் உள்ள பைசரனின் புல்வெளியில் சிற்றுண்டி உணவான பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், லெப்டினண்ட் வினய் நர்வாலின் தலையில் சுட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஏழே நாளில், இந்திய கப்பல் படை அதிகாரி ஒருவர் பயங்கரவாத தாக்குதலால் உயிரழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்