
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அருகே காஞ்சா கச்சிபவுலி கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் வன நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை மறுசீரமைப்பு செய்து மிக உயரமான ஐ.டி பூங்காவை உருவாக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் வனப் பகுதியில் உள்ள பறவைகள், விலங்குகள், இயற்கை வளங்கள் ஆகிய சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் தெலுங்கானா மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி வனநிலங்களை மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களை வெட்ட புல்டோசர்களும், மண் வெட்டும் இயந்திரங்களும் அங்கு கொண்டுவரப்பட்டது. இதனை அறிந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு, மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம் தெரிவித்தார்.
நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்துல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வனப்பகுதியை அழிக்க வேண்டிய காரணம் குறித்து தெலுங்கானா அரசு உரிய விளக்கம் வேண்டும் என்றும், அடுத்த உத்தரவு வரும்வரை, அந்த பகுதியில் மரம் வெட்டுதல் போன்ற எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து, அந்த நில பிரச்சனையை தீர்க்க அமைச்சர் குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழு, மாணவர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுட ஆலோசிக்கும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.