நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய இராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்கிடையே, இந்த விபத்து நடைபெற்றவுடன், காட்டேரி கிராம மக்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர்.
அதேபோல் தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், இந்த மீட்புப் பணியில் இராணுவத்திற்கு உதவினர். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு மருத்துவ குழுவும் விரைந்தது. இந்தநிலையில், மீட்பு பணிகளுக்கு உதவியதற்காக தமிழ்நாடு முதல்வர், காட்டேரி பொதுமக்கள் ஆகியோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்திற்குப் பிறகான மீட்பு மற்றும் காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் பணிகளில், உடனடியாகவும், தொடர்ந்தும் உதவிகளை அளித்ததற்காக முதல்வர், அவரது அலுவலக ஊழியர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவிக்கிறது" என பதிவிட்டுள்ளது.