ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து, மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள், ட்ரொன்கள், ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில பகுதிகளில் வெள்ளம் சற்று குறைந்த நிலையில் சிங் நகர் காலனியில் கழுத்தளவு உயரத்திற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. சிங்நகர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்த படகுகள் மூலமும், சொந்தமாகப் படகுகள் ஏற்பாடு செய்தும் வெளியேறி அரசு அமைத்துள்ள முகாம்களுக்குச் செல்கின்றனர்.
இந்த சூழலில், சிங்நகர் காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய நான்கு மாத குழந்தையுடன் கழுத்தளவு தண்ணீரில் நடந்து வெளியேறினர். அப்போது குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து தண்ணீரில் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியே அழைத்துச்சென்ற காட்சி பலரையும் கலங்கச் செய்தது.