யாகம் வளர்ப்பதில் தற்பொழுது இணைந்திருப்பவர் வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது மகேந்திரகிரி மலை. மேற்குத்தொடர்ச்சி மலையில் மிக முக்கியமானது இம்மலைப் பகுதி. இங்கு ஆரம்பமாகும் ஆறு "அனுமன் நதி' எனவும் மலையில் பல ரகசியங்களும், பொக்கிஷங்களும் உள்ளன என கூறப்படுவதும் உண்டு. இதே மகேந்திரகிரி மலையினை உள்ளடக்கி மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட திரவ உந்து நிலையமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கே களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக முன்னாள் துணைஇயக்குநர் முருகானந்தம் தலைமையிலான 13 நபர்கள் கொண்ட குழு 07-02-19 நள்ளிரவு முதல் 08-02-19 அதிகாலை வரை யாகத்தினை நடத்தியுள்ளது தான் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
""முதல்நாள் காலையில் எங்க ஊரு வழியாகத்தான் இரண்டு ஜீப்பில் ஆட்களை கூட்டிட்டுப் போனார் முன்னாள் இயக்குநர். அந்த வண்டியில் இரண்டு சாமியாரும் இருந்தாங்க. மறுநாள் கீழே வரும்பொழுது மறிச்சுக் கேட்டபொழுது "உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது' என மிரட்டிட்டுப் பறந்து போயிட்டாங்க'' என பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் மக்கள் கூறியதை குறிப்பு எழுதிய மத்திய உளவுத்துறை, ""இதே மலைப்பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனுக்காக யாகம் நடத்தப்பட்டது.
அதற்காக அவரது மகன் இங்குதான் இருந்துள்ளார். அனுமதியில்லாமல் இது நடந்துள்ளது'' என கூடுதலாக குறிப்பு எழுதியதோடு மட்டுமில்லாமல், நடவடிக்கை எடுக்கக் கோரி அதனை நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.பி.க்கும் அனுப்ப... தற்பொழுது அமைச்சருக்கும், களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக முன்னாள் துணை இயக்குநர் முருகானந்தத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.