Skip to main content

''நாங்கள் என்ன நக்சலைட் தீவிரவாதிகளா?'': வெடித்துக் கிளம்பும் பாரப்பட்டி விவசாயிகள்!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

சேலத்தை அடுத்த பாரப்பட்டி கூமாங்காடு பகுதியில் நிலம் அளவீடுக்காகச் சென்ற காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு விரட்டி அடித்தனர். பொக்லின் இயந்திரத்தைக் கொண்டு வந்து விவசாயிகளை கொன்று, குழி தோண்டி புதைத்துவிட்டு நிலத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று ஆவேசமாக கூறினர்.

 

 

 

சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது.

சேலம் மாவட்டத்தில் அரியானூரில் தொடங்கி மாவட்ட எல்லையான மஞ்சவாடி காப்புக்காடு பகுதி வரை 36.3 கி.மீ. தூரத்திற்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 248 ஹெக்டேர் தனியார் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் சாலைப்பணிகளுக்காக விளை நிலத்தை விட்டுத்தர முடியாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி பூர்வீக குடிமக்களின் மீதே எடப்பாடி பழனிசாமி அரசு காவல்துறையை ஏவி, விவசாயிகளை மிரட்டி நிலங்களை அளந்து முட்டுக்கல் நடும் பணிகளை முடித்துவிட்டனர். 


 

 "What are the Naxalite terrorists?": The barbarians who erupt!


 

அடுத்தக்கட்டமாக துல்லிய அளவீட்டுக்காக ஒவ்வொரு பகுதியாக வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை சகிதமாக சென்று வருகின்றனர். எதிர்ப்பு உச்சமடையும்போது அப்பாவி விவசாயிகள், மூதாட்டிகள் என்றும் பாராமல் அவர்களைக் கதற கதற கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், துல்லிய அளவீடுக்காக வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பாரப்பட்டி பகுதிக்குச் சென்றிருந்தனர். டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு இருந்தது.  

 

 

 

''வருகிற 13ம் தேதி ஆட்சேபனை மனு மீது சட்டப்பூர்வ விசாரணை நடக்கிறது. அதன்பிறகு வந்து நிலத்தை அளந்து கொள்ளுங்கள். அதுவரை இந்த நிலத்தில் யாரையும் அனுமதிக்க முடியாது,'' என்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

பதிலுக்கு காவல்துறையினரும், ''அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக உங்கள் எல்லோரையும் கைது செய்யவும் முடியும். ஒழுங்காக நிலத்தை அளக்க ஒத்துழைப்பு கொடுங்கள்,'' என்று மிரட்டினர்.

எதற்கும் அசைந்து கொடுக்காத விவசாயிகள், ஒருகட்டத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை போராடிப் பார்த்த அதிகாரிகளும், காவல்துறையினரும் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.


 

 "What are the Naxalite terrorists?": The barbarians who erupt!


 

பூலாவரியைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''எங்கள் பகுதியில், விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி ஏற்கனவே முட்டுக்கல் நட்டு விட்டனர். இன்று 'டேப்' வைத்து துல்லியமாக அளப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தினோம். அரசு அதிகாரிகளை தடுத்தால் கைது செய்வோம் என்று மிரட்டினர். வரும் 13ம் தேதி கருத்து கேட்புக்காக டி.ஆர்.ஓ. கடிதம் கொடுத்திருக்கிறார்.


அதன்பிறகு வருமாறு கூறினோம். உடனே காவல்துறையினர் எங்களில் நான்கு பேரை மட்டும் டி.ஆ.ர்ஓ. அலுவலகத்துக்கு வருமாறு கூப்பிட்டனர். எத்தனை பேரை கூப்பிட்டார்களோ அத்தனை பேரும் வருவோமே தவிர நான்கு பேர் மட்டும் தனியாக வர மாட்டோம் என்று கூறினோம். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மிரட்டியும் பார்த்தனர்.

சிலரை 'பிரைன் வாஷ்' செய்து பார்த்தனர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அளக்கறதுக்கு நாங்க அனுமதிக்கவில்லை. பிறகு கிளம்பி விட்டனர். இதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் கூட காவல்துறையினர் வீட்டுக்கு வந்து மிரட்டுறாங்கய்யா. எந்த நேரம் போலீசு வரும்னு தெரியாமல் பொண்டாட்டி புள்ளைங்களோட நிம்மதியாக தூங்க முடியலைங்கய்யா. இது என்ன நக்சலைட் ஏரியாவா? நாங்கள் என்ன தீவிரவாதிகளா?
 

எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டால் உள்நாட்டிலேயே நாங்கள் அனாதையாக மாறிவிடுவோம். எங்கள் உயிர் போனாலும் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம். அப்படியே நிலம் வேண்டுமானால் எங்களை சுட்டுப் பொசுக்கிட்டு எடுத்துக்கொள்ளட்டும். யாருமே நுழைய முடியாத ஒரு ரோடு மக்களுக்குத் தேவையா? கார்ப்பரேட் நிறுவனத்திற்குதான் இந்த ரோடு போடுகின்றனர்.

25 வருஷம் கழிச்சு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி பேசுகிறார்களே ஒழிய, அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி வேண்டும் என்பதை ஏன் யாருமே யோசிக்கிறதில்ல? 96 சதவீத விவசாயிகள் தாமாக நிலம் கொடுக்க முன்வந்துள்ளதாக முதல்வர் மிகப்பெரிய பொய்யைச் சொல்கிறார். மீடியா முன்பாக சில கிராமங்களில் மட்டும் அதிகாரிகள் கருத்து கேட்கட்டும். ஒரு விவசாயிகூட நிலம் கொடுக்க விரும்பவில்லை என்பது அப்போது தெரியும்,'' என்றார்.


 

 "What are the Naxalite terrorists?": The barbarians who erupt!


 

கூமாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறுகையில், ''எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் போலீசார் வந்து கண்காணிக்கின்றனர். பூட்ஸ் காலோடு எங்களோட விசைத்தறிக் கூடத்தில் நுழைகின்றனர். நேற்று பெண் போலீசார் உட்பட நாலஞ்சு பேர் வந்து எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர்களைப் பார்த்து நீங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கீங்கனு? விசாரிக்கின்றனர். யாரோ நாலு பேரு உங்க வீட்டுக்கு வந்தாங்களாமே... அவங்கள்லாம் யாருனு விசாரிச்சாங்க... தினமும் காலையிலும் எங்க வீட்டுக்காரரு எங்க போராரு வர்றாருனு கண்காணிக்கின்றனர். போலீசால் எங்களுக்கு நிம்மதி போச்சு. எங்களுக்குச் சொந்தமான 40 சென்ட் விவசாய நிலமும், வீடும் இந்த ரோடால பறிபோகுது. சாகும் வரைக்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,'' என்றார்.

 

 

 

ராஜேஸ்வரி என்பவர் கூறுகையில், ''எங்க வீட்டையும் நிலத்தையும் எடுத்துக்குவாங்க... எங்களையும் எங்கேயும் வெளியே போகக்கூடாதுனு போலீசார் கண்காணிச்சிட்டு இருக்காங்க. இப்படி இருந்தால் நாங்க எப்படிங்க எங்க வயித்த கழுவறது? ஒரு வார்த்தை கூட எங்களிடம் கேட்காமல் எங்கள் நிலத்தை அளந்து எடுத்துட்டு போறாங்க. எங்களுக்கு நிலம் கொடுக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதையும் மீறி நிலம் வேண்டுமானால் எங்களை சுட்டுக்கொன்னுட்டுப் எடுத்துட்டுப் போகட்டும்.


 

 "What are the Naxalite terrorists?": The barbarians who erupt!


முதல்வர் யாரிடமும் கருத்து கேட்காமலேயே, விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வந்ததாக எப்படி சொல்றாரு? அவர் களத்தில இறங்கி வந்து கருத்து கேட்டாரா? முதல்ல அவரை வரச்சொல்லுங்க. மக்களை சந்திச்சு கருத்து கேட்கட்டும். எந்த விவசாயியையாவது அவர் சந்திச்சாருனு சொல்லச் சொல்லுங்க சார்... நாங்க அந்தம்மாவுக்குதான் ஓட்டு போட்டோம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்திருந்தால், இந்நேரம் மக்கள் வலியைப் பற்றி தெரிஞ்சிருப்பாரு. பொக்லின் வரச்சொல்லி குழி தோண்டி எங்களை கொன்னு புதைச்சிட்டு அப்புறமா நிலத்தை எடுத்துட்டுப் போகச்சொல்லுங்க...,'' என்றார் ஆவேசமாக.
 

மக்களின் கூக்குரலுக்குக் கொஞ்சமும் செவி மடுக்காத அரசும், காவல்துறையும் தொடர்ந்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்க நாலுகால் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதே கள யதார்த்தமாக இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்