2011 ஆம் ஆண்டு... தனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன், 29 ஏப்ரல் அன்று நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்குக் கொடுத்த பிறந்த நாள் விருந்து, இந்த அறிவிப்பு.
விரும்பத்தகாத சில விஷயங்கள் நடப்பதால், மாநிலம் முழுவதும் இருந்த தன் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாகவும், நலத்திட்டங்கள் செய்வதற்கு நல்ல மனம் போதும், அமைப்பு தேவையில்லை எனவும் கூறியிருந்தார் அஜித். அவரின் இந்த அறிவிப்பு, திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும், விவாதங்களைத் துவக்கியது. அதுவரை, 'கிங் ஆஃப் ஓப்பனிங்' என்று அழைக்கப்பட்டவர் அஜித். அது அவரது ஐம்பதாவது படமான மங்காத்தா வெளிவர இருந்த நேரம். ரசிகர் மன்றங்களைக் கலைத்ததால் அந்தப் படத்திற்கு வழக்கமான ஓப்பனிங் இருக்காதென்றும், ரசிகர்கள் கோபமாய் இருப்பார்கள் என்றும் பேசப்பட்டது. அஜித் அமைதியாகவே இருந்தார். வெளிவந்தது மங்காத்தா. மிகப்பெரிய ஓப்பனிங்க் தந்தனர் அஜித் ரசிகர்கள். "மன்றத்தைக் கலைக்கலாம்... எங்கள் மனதைக் கலைக்க முடியாது" என்று தங்கள் 'தல'க்கு கூறினர் அவரது ரசிகர்கள்.
தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில், அஜித் எடுத்த அந்த முடிவு, எந்த பெரிய நடிகரும் எடுக்காதது, எடுக்கத் தயங்குவது! அவர் சொன்ன காரணம், யாரும் மறுக்க முடியாதது, ஆனால் மறைத்து மூடுவது. நற்பணிகள் செய்ய மன்றங்கள் தேவையில்லை, அதே நேரம் நடிகர்கள் மன்றங்களை வைத்திருப்பது நற்பணிகளுக்காக மட்டுமில்லை, தங்கள் மார்க்கெட்டுக்காகவும்தான். அவற்றைக் காட்டி, பின்னாளில் அரசியலில் நுழைந்த நடிகர்கள் பலர். மன்றங்கள் இருந்த போதும் கூட, வருடம்தோறும் ரசிகர் மன்ற கூட்டங்களோ, சந்திப்புகளோ நடத்தும் வழக்கமில்லை அவருக்கு. மன்றங்களைக் கலைத்ததன் மூலம், ரசிகர்களை எந்த விதத்திலும் பயன்படுத்த மாட்டேன் என்று நிரூபித்தார். ரசிகர்களும் அவரைப் புரிந்து கொண்டு அமைப்பில்லாமலேயே தொடர்கின்றனர்.
ரசிகர்களை சந்திக்க மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், அதிகம் பேட்டிகள் தர மாட்டார், மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தவரில்லை, வரிசையாக வெற்றிகளை மட்டுமே கொடுத்தவரில்லை. ஆனாலும், எந்த மேடையிலும், இந்தப் பெயரை சொன்னால் அரங்கம் அதிர்கிறது. எந்த ரசிகனுக்கும் இவரைக் கண்டால் பரவசம் ஆகிறது. எந்தப் படத்திலும் இவரைக் காட்டினால் விசில் பறக்கிறது. எந்த நாளிலும் இவர் பட first look வந்தால் facebook, twitter ட்ரெண்டாகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?
நடிப்பைத் தாண்டிய நாயகனாக அவரைப் பார்க்கிறார்கள் இவரது ரசிகர்கள். இப்பொழுது மிஸ்டர்.க்ளீன் (Mr.Clean) என்று சக சினிமா நண்பர்களால் அழைக்கப்படும் அஜித் இந்தப் பக்குவத்தையும் பண்பையும் பிறப்பிலேயே பெற்றவர் அல்ல. ஆரம்ப காலத்தில், நடிகை ஹீராவுடன் காதல்-மோதல் கிசுகிசுக்கள், பேட்டிகளில் வார்த்தைகளைக் கொட்டுவது, ரேசிங்கில் (racing) கட்டுப்பாடற்ற காதல், அதனால் விபத்துகள், தாமதமான படங்கள் என்று இருந்தவர்தான்.
ஆனால், தன்னை ஒரு கூட்டம் கவனித்துத் தொடர்கிறது என்று உணர்ந்து இந்தப் பக்குவத்தை அடைந்தார். தன்னைத் திரையில் காண ஒரு கூட்டம் ஏங்கிக் காத்திருக்கிறது என்று உணர்ந்து குறைத்துக் கொண்டார் ரேசிங்கை (racing). தன்னைத் திரையுலகில் தோற்கடித்துத் தூக்கியெறிய பலர் கவனமாய் இருக்கின்றனர் என்று உணர்ந்து கதையில் முழுமையாய் கவனம் செலுத்தினார்.
ஆஞ்சநேயா, ஜனா, ஜி... என பெருந்தோல்விகள் கண்ட காலகட்டம் அது. மறுபுறம், இவர் மறுத்த ஜெமினி, நியூ, மிரட்டல் என்ற கஜினி, படங்கள் வெற்றி பெற்றன. இவரது சமகால சினிமா போட்டியாளர்களான விஜய், விக்ரம், சூர்யா மூவரும் வெற்றிகளைத் தந்துகொண்டிருந்தனர். ஆனால் அதே காலகட்டத்தில் தான் இவருக்கு பெருமளவு ரசிகர்கள் உருவாகினர். படங்களின் தோல்வியைத் தாண்டி, இவர் திரும்பி வந்து பதித்த தடங்களைப் பார்த்தனர். ரெட், ராஜாவுக்குப் பின் வில்லன்... பரமசிவன், திருப்பதிக்குப் பின் வரலாறு , ஆழ்வார், கிரீடத்திற்குப் பின் பில்லா, ஏகன், அசலுக்குப் பின் மங்காத்தா என ஒவ்வொரு முறையும் இந்தக் குதிரை விழுந்த பள்ளங்கள் பெரிது, பின் எழுந்த உயரம் அதை விடப் பெரியது.
இவரது திரைப்பயணத்தைக் கூர்ந்து கவனித்தவர்களுக்குத் தெரியும், வெற்றியோ தோல்வியோ, பேசப்பட்டதோ இல்லையோ, பெரிதோ சிறிதோ, மாற்று முயற்சிகளை இவர் செய்து கொண்டே இருந்தார். வாலியில் இரட்டை வேடம் முயன்றார். சமவயது நாயகர்கள் காதல் படங்கள் செய்த போது, அமர்க்களம், தீனா என 'ரௌடி' பாத்திரங்கள் செய்தார். அதன் பின் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் ரௌடிகள் அராஜகம்தான். பின் அதை மாற்றி சிட்டிசனில் பல வேடங்களை முயற்சித்தார். பில்லாவில் நாயகனாக இவரது ஸ்டைலும் தோற்றமும், அதற்குப் பின்னர் பலரையும் கோட் போட வைத்தது. மங்காத்தாவில் இவரது தோற்றமும் கதாபாத்திரமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
படங்களைத் தாண்டியும் இவர் தனித்துவம் மிக்கவர்தான். 'லக்கி ஸ்டார்', 'அல்டிமேட் ஸ்டார்', 'தல' ஆகிய தன் பட்டங்களை விலக்கி, தன் பெயரை மட்டும் போட்டால் போதும் என்றார். முதலில் நடித்திருந்தாலும், பின்னர் விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்த்த அவர், ஒரு கட்டத்துக்குப் பின், தான் நடிக்கும் படங்களையுமே விளம்பரப்படுத்த வருவதில்லை, அது தன் நடிப்புத் தொழிலை பாதிக்கும் என தெரிந்தும். பாராட்டக் கூப்பிட்ட மேடையில் போராட்டம் செய்தார். கலைஞர் முன்னிலையில் இவர் பேசியது பலரை அதிர வைத்தது. ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.அதன் பின்னர் கலைஞரை சந்தித்து விளக்கமளித்தது தனிக்கதை.
அதுபோல ஜெயலலிதா இவர் மேல் தனி அன்பு வைத்திருந்தார். அதுவே ஜெயலலிதா மறைந்தபோது இவர் அதிமுகவுக்கு வருவார் என்றெல்லாம் வதந்தி எழும் அளவுக்கு வந்தது. 2019 ஆண்டு தொடக்கத்தில் திருப்பூரில் ’அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்’ என்ற செய்தி வந்தது. அந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை, அஜித்தைப் புகழ்ந்தும் அஜித் ரசிகர்கள் பாஜகவிற்கு வருவது பொருத்தமானது என்பது போன்ற தொனியில் பேசியிருந்தார். பொதுவாக அறிக்கைகள், அறிவிப்புகள் என்று பொது வெளியில் கருத்து சொல்லாத அஜித், அடுத்த நாளே தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுதான் அவரது தற்போதைய மனநிலை.
திரையுலகம் கிரிக்கெட் போட்டி நடத்திய பொழுது அதை எதிர்த்து கருத்து தெரிவித்தார், கலைவிழா நடத்திய போதும் கலந்துகொள்ளவில்லை, காவிரி போராட்டதுக்கு வரவில்லை, இப்படி ஒதுங்கியே இருக்கிறார். என்றாலும், பத்தாம் வகுப்பைத் தாண்டாத இவர் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சிக்குக் காரணம் இவரது முயற்சி.
உழைப்பாளர் தினத்திலேயே இவர் பிறந்தது தற்செயலாக நடந்த பொருத்தமான நிகழ்வு என்கிறார்கள் என்றும் விஸ்வாசமான இவரது ரசிகர்கள்; மறுப்பதற்கில்லை. ஹேப்பி பர்த்டே அஜித்!