Skip to main content

பிச்சைக்காரனாக இருந்தால் தப்பில்லை, ஆனால் பிச்சைக்கார புத்தியோடு இருந்தால்..!! - அதிமுக மீது ரெய்டு நடத்திய வேலுச்சாமி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

gjh

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், தங்கம், வைரம் ஆகியவற்றைக் கைப்பற்றிவந்த நிலையில், இந்திய வரலாற்றில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில், கே.சி. வீரமணி வீட்டில் நூற்றுக்கணக்கான யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி பார்ப்பது, அதிமுக தலைமை சொல்வதுபோல் இது பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது சட்டப்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகளை திருச்சி வேலுச்சாமி அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு, 

 

பெரியாரின் பிறந்த தினம் தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதே தினத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால் சிலர், பிரதமர் மோடி பிறந்தநாள்தான் உண்மையான சமூகநீதி நாள் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

வண்ண மயில் தோகை விரித்து ஆடுவதற்கும், வான்கோழி சிறகை விரித்து ஆடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இதற்குப் பொருந்தும். மயில் ஆடுகிறதே என்று பொறாமைப்பட்டு வான்கோழியும் ஆடுவது மாதிரிதான் இந்தப் பேச்சு இருக்கிறது. இந்த இருவரையும் யார் ஆதரிக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் நாம் இந்த கேள்விக்குப் பதில் கூறமுடியும். பாமரன், பஞ்சமன், பாதசாரிகள் என அடித்தட்டு மக்கள் எல்லாம் பெரியாரை ஆதரிக்கிறார்கள். மோடியை யார் ஆதரிக்கிறார்கள், அம்பானி, அதானி, மிட்டா மிராசுகள் ஆதரிக்கிறார்கள். இதிலிருந்தே நாம் இந்த கேள்விக்குப் பதிலைப் பெற்றுவிடலாம். எனவே இந்த இருவரில் யார் சமூகநீதிக்குப் பொருத்தமானவர்கள் என்பதை இதைப் பார்க்கும் மக்களே முடிவெடுத்துக்கொள்ளலாம். 

 

சில நாட்கள் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. இந்த சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

தொடர்ச்சியாக நடக்கப் போகிற விஷயம்தானே இந்த ரெய்டு. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், வீட்டில் ரெய்டு வந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தற்போது ஒருவித நிம்மதி அடைந்துள்ளார்கள், ஆனால், மற்றவர்கள் எப்போது ரெய்டு வருமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். நான் எதிர்பார்த்தது அந்த மணிக்கு அப்புறம் வேறு மணியை, ஆனால் ரெய்டு வேறொரு மணி வீட்டில் நடைபெற்றுள்ளது. எல்லார் வீட்டிலும் ரெய்டு போக வேண்டிய அவசியம் இருக்கிறது. என்ன ஒன்னு கூடக்கொறைய இருக்கும். அவர் 10 ஆயிரம் கோடி என்றால், இவர் 9 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருக்கும். எல்லார் வீட்டுக்கும் ரெய்டு போகப் போறது உறுதி. எப்போது வரும் என்பது தெரியாது. 

 

பொதுவாக ரெய்டு நடத்தப்படும் இடங்களில் தங்கம், பணம், பொருட்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். ஆனால், முதல்முறையாக மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், பிச்சைக்காரனாக இருந்தால் தப்பில்லை, ஆனால் பிச்சைக்கார புத்தி இல்லாமல் இருக்க வேண்டும் என்று. மூன்று கிலோ தங்கம் எடுத்துள்ளார்கள், வைரம் எடுத்துள்ளார்கள். ஆனால் இதுல மணல் வேற. இந்தப் பிச்சைக்கார புத்தி இன்னும் போகல போல. 

 

முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படுகிற ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளதே? 

 

இப்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனால், அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது ஆர்.கே. நகர் தேர்தலின்போது அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் டைரி கைப்பற்றப்பட்டு யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது ‘இது பழிவாங்கும் நடவடிக்கை’ என்று இந்த இரட்டையர்கள் ஏன் கூறவில்லை? தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், துணை முதல்வர் இருக்கும்போதே ரெய்டு நடத்தப்பட்டதே, அதுவும் பாரா மிலிட்டரி படையை வைத்துக்கொண்டு சோதனை நடத்தினார்களே, அப்போதாவது சொல்ல வேண்டியதுதானே, ‘இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று. ஆனால் தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் ரெய்டு நடவடிக்கை எடுத்தால் மட்டும் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது?